Advertisment

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு, இனி 3-வது நீதிபதி விசாரணை

AIADMK MLAs Disqualification case verdict:18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தேசிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MLA'S Disqualification Case, TTV Dhinakaran

MLA'S Disqualification Case, TTV Dhinakaran

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தேசிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் விவரம் குறித்த பட்டியல் மூலமாக நேற்று இரவு தெரிய வந்தது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATES தீர்ப்பு தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் இங்கே:

5:00 PM : MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதி சுந்தர் பிறப்பித்த உத்தரவின் சாராம்சம்:

சபாநாயகரின் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.

தகுதிநீக்க உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது.

எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சித் தாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது.

கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைக்க கொடுக்கவில்லை.

இந்த காரணங்களுக்காக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது. இவ்வாறு நீதிபதி சுந்தர் உத்தரவு பிறப்பித்தார்.

இரண்டு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது ஒரு நீதிபதிக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி. ரமேஷ் முடிவு செய்வார் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை வழங்கிய பிறகு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 18 தொகுதிகள் காலியாகிவிட்டதாக அறிவிக்கக்கூடாது என்ற 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, கடந்த செப்டமர் மாதம் 20ஆம் தேதி நீதிபதி எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

4:45 PM : MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பின் சாராம்சம்:

தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என கூறமுடியாது. சபாநாயகர் உத்தரவை பிறப்பிக்கும் முன்னர் ஆட்சியை கலைப்பார்களா, மாட்டார்களா என இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அதனடிப்படையில் தகுதிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை எடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்தால் முடியாது. அது நீதிமன்ற பணியும் இல்லை. அவருக்கு கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவுகளில் சபாநாயகர் அதிகாரங்களில் குறைந்த அளவிற்கே தலையிட முடியும். முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

சபாநாயகர் முடிவெடுக்க பயப்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தாலும் தலையிட முடியும். சபாநாயகரின் உரிமையை மீறி முடிவு எடுத்தாலோ, சட்டம் மீறபட்டிருந்தாலோ, இயற்கை நியதி மீறபட்டிருந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

ஆனால் இந்த விவகாரத்தில் சபாநாயகரால் இவை மீறப்பட்டதாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. அதனால் 18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

ஏற்கனவே தகுதி தகுதி நீக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர்கள் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியதாக கூறுவது தவறு.

கட்சியில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் அதுமாதிரியான நடவடிக்கைகள் கூட கட்சித்தாவல் தான் என்று கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதனடிப்படையில் சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

சபாநாயகர் உத்தரவில் இயற்கை நீதி எவ்விடத்திலும் மீறப்படவில்லை. அதனடிப்படையில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவர் உத்தரவு செல்லும். அந்த உத்தரவை எதிர்த்த 18 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

4:00 PM : தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மொத்தம் 192 பக்கங்களில் தனது தீர்ப்பை எழுதியிருக்கிறார். அதில், ‘சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் இந்த வழக்கில் குறைவாகவே இருக்கின்றன. சபாநாயகர் இப்படித்தான் செயல்பட வேண்டும் என கூறுவது நீதிமன்றத்தின் பணி அல்ல’ என குறிப்பிட்டிருக்கிறார்.

3:oo PM: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தவும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாசிட்டிவான அம்சமே!

1:50 PM : இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், 3-வது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு செல்லும். பொதுவாக நீதிமன்ற மரபுப்படி எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முடிவு செய்வார். ஆனால் இந்த வழக்கில் தலைமை நீதிபதியும் தீர்ப்பு வழங்கியிருப்பதால், 2-வது சீனியர் நீதிபதியான ஹூலுவாடி ரமேஷ் 3-வது நீதிபதியை முடிவு செய்வார் என தெரிகிறது.

1:40 PM: சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி சுந்தர், ‘சபாநாயகர் உத்தரவு செல்லாது’ என உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு செல்கிறது.

1:27 PM: தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தனர்.

1:25 PM: அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் நீதிமன்ற அறைக்கு வந்தனர்.

1:10 PM : நீதிமன்ற அரங்கிற்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் வந்தனர். பட்டியல் இடப்பட்டபடி 7-வது வழக்காக தீர்ப்பு வழங்குவதாக இருந்தால், இன்னும் தாமதம் ஆகலாம்.

1:00 PM: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகலாம். திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் நீதிமன்றம் வந்தனர். தீர்ப்பை அறிய சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்திருந்தனர். கூட்டம் அதிகமானதால் நீதிமன்ற அறைகள் மூடப்பட்டன.

12:30 PM : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக சிறிது நேரமே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் அதை தவிர்த்துவிட்டு தனது அறையில் தலைமை வழக்கறிஞரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. தீர்ப்புக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் கலந்துகொண்டார்.

12:00 PM : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக இன்று அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், ‘நல்லதே நடக்கும்’ என்றார்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம். புஸ்வாணமாகவும் இருக்கலாம்’ என குறிப்பிட்டார்.

11:30 AM: பிற்பகல் 1 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை வழங்க இருக்கிறது. இதையொட்டி இன்று காலையிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் மீடியா கூட்டம் எகிறியது. இந்தி, ஆங்கில சேனல்களும் அதிகம் முகாமிட்டிருக்கின்றன.

11:00 AM : டிடிவி தினகரன் இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடக்கிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் என்ன செய்வது? எதிராக வந்தால் என்ன செய்வது? என இரு கோணங்களிலும் அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

10:30 AM: அதிமுக உள் விவகாரம் சம்பந்தப்பட்ட வழக்கு என்றாலும், இதை அதிகம் எதிர்பார்ப்பது திமுக.தான்! இந்த வழக்கின் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பல மாதங்களாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

To Read, 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை...ஒரு கண்ணோட்டம்! Click Here

To Read, 18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு அனைத்து தரப்பு வாதங்கள்!!! Click Here

To Read, 18 எல்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு : எம்.எல்.ஏக்களின் விவரங்கள்! Click Here

10:00 AM: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:

1. தங்கத்தமிழ் செல்வன் – ஆண்டிப்பட்டி

2. ஆர்.முருகன் – அரூர்

3. சோ.மாரியப்பன் கென்னடி – மானாமதுரை

4. கே.கதிர்காமு- பெரியகுளம்

5. சி.ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம்

6. பி.பழனியப்பன் – பாப்பிரெட்டிப்பட்டி

7.வி.செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி

8. எஸ்.முத்தையா – பரமக்குடி

9. பி.வெற்றிவேல் – பெரம்பூர்

10. என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர்

11. எம்.கோதண்டபாணி – திருப்போரூர்

12. டி.ஏ.ஏழுமலை – பூந்தமல்லி

13. எம்.ரெங்கசாமி – தஞ்சாவூர்

14. ஆர்.தங்கதுரை – நிலக்கோட்டை

15. ஆர்.பாலசுப்பிரமணி – ஆம்பூர்

16. எஸ்.ஜி.சுப்பிரமணியன் – சாத்தூர்

17. ஆர்.சுந்தர்ராஜ் – ஒட்டப்பிடாரம்

18. கே.உமா மகேஸ்வரி – விளாத்திகுளம்

 

Chennai High Court Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment