சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தம்மை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்” என காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்பதைத் தடுக்கவே தன்னை கைது செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “புழல் சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை. 500 கைதிகளுக்கு ஒரு சமையல் என இருக்க வேண்டும். ஆனால் 2910 கைதிகளுக்கு ஒரு சமையல் அறைதான் உள்ளது” என்றும் அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் மனுவை நவ.10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
இந்தக் கொடிகம்பம் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இந்த நிலையில், அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுகின்றன. இதற்கிடையில் அமர் பிரசாத் ரெட்டியின் மனைவி தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய சதி தீட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சுமத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரசு பஸ்ஸில் நெல்லைக்கு அழைத்துச் செல்லப்படும் பா.ஜ.க அமர்: அம்பை கோர்ட்டில் ஆஜர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“