Ambedkar Periyar Study Circle former secretary Kripa Mohan admission denied : சென்னை பல்கலைக்கழகத்தில் 2018ம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருபா மோகன் என்ற மாணவர். இந்த வருடம் தத்துவவியல் துறையில் புத்திசம் தொடர்பான முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளாராக இயங்கி வந்தார்.
தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்ற நிலையில், அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி கிருபா மோகனிடம் ”நீங்கள் முறையாக எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழை தரவில்லை. அதனால் உங்களின் அட்மிசனை ரத்து செய்கின்றோம்” என்று கூறியுள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே கல்லூரியில் முதலில் படித்த காரணத்தால் எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார்.
இந்த பிரச்சனை கடந்த ஒரு மாத காலமாகவே நடைபெற்ற வண்ணம் தான் இருந்துள்ளது. கிருபா மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தன்னுடைய அட்மிசன் ரத்து செய்யப்பட்டதிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என்றும் கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிருபா மோகன்
கிருபா மோகன் தற்போது அம்பேத்கார் - பெரியார் வட்டத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே. ஆனால் அவர் இளங்கலை படிக்கையில் அவ்வாசகர் வட்டத்தின் செயலாளராக பணியாற்றிய போது, பல்கலைக்கழகத்திற்கு தருண் விஜய் மற்றும் இல.கணேசன் வருகை புரிந்த போது போராட்டங்கள் நடத்தப்பட்டது. மாட்டுக்கறிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் செய்துள்ளார் கிருபா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே பல்கலைக் கழகத்தின் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்றல் ஆகும் போது மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. ப்ரொவிஷ்னல் சர்டிஃபிகேட் மட்டுமே போதும் என்று துறைத் தலைவர் கூறினார். ஆனால் ஆகஸ்ட் 29ம் தேதி என்னுடைய அட்மிசன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியதாக கிருபா மோகன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி தரப்பு என்ன கூறுகிறது?
விதிமுறைகளை முறையாக கிருபா மோகன் பின்பற்றவில்லை என பல்கலைக்கழகம் தரப்பு கூறுகிறது. இது குறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பி. துரைசாமி குறிப்பிடுகையில், “கடந்த வருடம் மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் கிருபா மோகன் நிறைய போராட்டங்களில் கலந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், இதழியல் துறையில் பட்ட மேற்படிப்பிற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். புதிய துறையில் சேர வேண்டும் என்றால் இதற்கு முன்பு படித்த துறையில் இருந்து முறையாக சான்றிதழ்களை பெற வேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் எதையும் அவர் பின்பற்றாத காரணத்தால் அவரின் அட்மிசன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இவரை நீக்குவதற்காக மேலிடத்தில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.