அமித்ஷா, இன்று பாஜக நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். எனினும் அமித்ஷா வருவதற்கு முன்பாகவே ‘கோ பேக் அமித்ஷா’ ட்ரென்ட் ஆனது.
பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியினரை தயார் படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக இன்று(ஜூலை 9) சென்னையில் அவரது நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சென்னையில் அமித்ஷா நிகழ்ச்சிகள் முழு விவரம்
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் விஐபி கோல்டன் பீச் அரங்கில் பாஜக மாநில நிர்வாகிகள் முதல் பூத் அளவிலான பொறுப்பாளர்கள் வரை சுமார் 20,000 பேரை அமித்ஷா வந்திக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைப்பு ரீதியாக தயாராவது குறித்து அமித்ஷா கட்சியினருக்கு அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 9 மணி வரை அவரது ஆலோசனை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷா நிகழ்ச்சிகள் LIVE UPDATES:
5:00 PM: அமித்ஷாவை வரவேற்க சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வரை சாலையோர நடைபாதையில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது. இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயனிடம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
3:30 PM: சென்னை விமான நிலையத்தில் தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த அமித்ஷா, ‘தமிழக மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என கூறியிருக்கிறார்.
அமித்ஷா வரவேற்புக்காக சென்னையில் சாலையோர நடைபாதையில் வைக்கப்பட்ட பதாகை
2:30 PM: ‘அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘1000 முறை அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தாலும் இங்கு பாஜக வளராது’ என கூறினார்.
2:15 PM: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கான தமிழக பாஜக குழு 16 பேரை உள்ளடக்கியது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட 16 பேருடனும் முதல் கட்டமாக அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
1:45 PM: சென்னை, ஈஞ்சம்பாக்கம் கோல்டன் பீச் அரங்கில் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான தமிழக பாஜக குழுவினருடன் ஆலோசனைக் கூட்டத்தை அமித்ஷா தொடங்கினார்.
1:30 PM: கோ பேக் அமித்ஷா என்கிற ஹேஷ்டேக்-கிற்கு பதிலடியாக பாஜக.வினர் சமூக வலைதளங்களில் #TNWelcomesAmitShah என்கிற ஹேஷ்டேக்-ஐ அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அமித்ஷா-வுக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜக.வினர் வரவேற்பு
12:45 PM: அமித்ஷா சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
அமித்ஷா-வுக்கு சென்னையில் வரவேற்பு
12:00 PM: சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோல்டன் பீச் ரிசார்ட்டில் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தமிழக பாஜக குழுவினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் உடனான கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மாலை 4.45 மணிக்கு இந்து அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடும் அமித்ஷா, அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 16 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் உரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பாஜக புதுச்சேரி நிர்வாகிகளுடனும், 9.15 மணிக்கு அந்தமான் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அந்தக் கூட்டத்திற்கு பிறகு இரவு 10.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா டெல்லி புறப்படுகிறார்.
அமித்ஷா சென்னை நிகழ்ச்சிகள் குறித்து முரளிதர்ராவ் வெளியிட்ட நிகழ்ச்சி நிரல்
11:30 AM: அமித்ஷா காலை 10.44 மணிக்கு புனேயில் இருந்து புறப்பட்டார். அவரது விமானம் 12.35 மணிக்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11:00 AM: அமித்ஷா சென்னையில் கால் பதிப்பதற்கு முன்பாகவே ‘கோ பேக் அமித்ஷா’ என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்களும், தமிழ் தேசிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் காலை முதல் அமித்ஷா வருகைக்கு எதிரான பதிவுகளை ட்விட்டரில் தொடர்ந்து மேற்படி ‘ஹேஸ்டேக்’குடன் பதிவிட்டனர்.
Amit Sha Tamilnadu Visit: அமித்ஷா வருகையை முன்னிட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்ட ஹேஷ்டேக்
‘கோ பேக் அமித்ஷா’ இந்திய அளவில் 2-வது இடத்திலும், சென்னை ட்ரெண்டிங்கில் 3-வது இடத்திலும் டிவிட்டரில் இருந்து வருகிறது.