சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி பேசுகையில், "பாமக சார்பில் முதல்வர், துணை முதல்வரை குழுவாக சந்தித்தோம். இதன் நோக்கம், ஒன்று எனது தொகுதி பற்றியது. மற்றொன்று, பாமக கொடுத்த 10 அம்ச கோரிக்கைகள் பற்றியது. உடனடியாக அவற்றை நிறைவேற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவற்றினை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். விரைவில் இது தொடர்பாக அறிக்கை வரும் என நம்புகிறோம்.
இந்த 10 கோரிக்கைகளும் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளாகும். அதில் மிக முக்கியமான கோரிக்கையான காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி மனு அளித்திருக்கிறோம். மேலும், சட்ட வடிவம் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம். இதை மீண்டும் முதல்வரிடம் இன்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக குழு அமைக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
அதேபோல், பாமகவின் நீண்ட கால கோரிக்கை என்பது முழு மதுவிலக்கு. எங்கள் கோரிக்கைக்குப் பிறகு தான் அனைத்துக் கட்சிகளும் பூரண மதுவிலக்கை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் இரண்டாண்டு காலத்திற்குள் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினோம். நிச்சயம் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்.
மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்தும் வலியுறுத்தினோம். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக முதல்வர் கூறினார். தவிர, அதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
எழுவர் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக அவர்கள் அனைவரும் விடுதலை ஆவார்கள் என நம்புகிறோம். நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடியிடமும் இதுகுறித்து வலியுறுத்த உள்ளோம்.
எங்களுடைய 10 அம்ச கோரிக்கைகளை அதிமுக ஏற்றுக் கொண்ட பின்னர் தான் கூட்டணியில் இணைந்தோம். அதில், short term, Intermediate, Long term என மூன்று வகையாக கோரிக்கைகளை பிரித்து இருக்கிறோம். அது தொடர்பாகவும், முதல்வருடன் பேசி இருக்கிறோம்.
எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சி இணைய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அனைத்து தொகுதியிலும் எங்கள் மெகா கூட்டணி வெற்றிப் பெறும்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க - election 2019 alliance live updates : மதிமுகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு! '20 இடங்களில் திமுக போட்டி' - மு.க. ஸ்டாலின்