ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க சார்பில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று அந்தத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்: பழனி முருகன் கோவில்.. அன்னைத் தமிழில் குடமுழுக்கு; பெ. மணியரன் கோரிக்கை
இந்தநிலையில், பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், எம்.எல்.ஏ சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, சிவசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் செந்தில், சிவகாமி மகேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த முறை இந்தத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூம், அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸூம் போட்டியிட்டன. த.மா.க சார்பில் யுவராஜா, காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா.,வை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா அல்லது தி.மு.க.,வே போட்டியிடுமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதேநேரம் அ.தி.மு.க தரப்பில் மீண்டும் த.மா.க.,வுக்கு ஒதுக்கப்படுமா அல்லது அ.தி.மு.க போட்டியிடுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணியில் உள்ளதாகக் கூறும் பா.ஜ.க, தேர்தல் பணிக்குழுவை அமைத்து அறிவித்துள்ளது. இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பா.ஜ.க களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil