தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். அவர்களது நினைவினை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் பலியான பள்ளிக் குழந்தைகளின் நினைவிடத்தில் பொதுமக்கள், குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் ஒன்றுக்கூடி நினைவேந்தல் நடத்துவது வழக்கம்.
இந்தநிலையில் இந்தாண்டு பள்ளி தீவிபத்தினால் உயிரிழந்த 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவிடத்தில் இளைஞர் அரண் அமைப்பு சார்பில் ஒவியக் கண்காட்சி துவங்கியது. இந்த ஓவியக் கண்காட்சியை கும்பகோணம் மேயர் க.சரவணன் இன்று தொடங்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்: வால்பாறை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு
இந்த நிகழ்ச்சியில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, இளைஞர் அரண் தமிழ்நாடு அமைப்பாளர் சைமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க அமைப்புச் செயலாளர் மகிழன், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஓவியக் கண்காட்சியில், கல்வி பாதுகாப்பு, அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்கான உரிமைகள், நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கைகள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேசிய விருது பெற்ற விஸ்வம் தலைமையிலான 22 ஓவியர்கள் வரைந்த 22 ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; “நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கைகள் உள்ளிட்டவற்றை எதிர்ப்பதற்காகக் கடந்த ஜூலை 1 ஆம் மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையிலும், அதனைத் தொடர்ந்து கும்பகோணத்திலும் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழக மக்களின் கல்விக் கண்களை அவிப்பதாக உள்ளது.
தமிழக அரசு இந்த கொள்கையை எதிர்ப்பதுடன், தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை வேண்டும் என திட்டமிட்டு அதற்கான குழுவையும் அமைத்துள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பதுடன், புதிய துறைகளில் இந்தியமயம், வணிகமயம், சனாதானமயம் கல்வித் துறையில் நுழைந்து கொண்டிருக்கிறது.
இதனை எதிர்த்துத் தடுப்பதற்காகவும், 2004ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளை நினைவுகளை கூறும் வகையிலும் வரும் 16-ம் தேதி கும்பகோணம் இளைஞர் அரண் சார்பில் கல்வி உரிமை பேரணி மற்றும் மாநாடு நடைபெற இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நினைவு மண்டபத்திலுள்ள உயிரிழந்த குழந்தைகளின் பெயர் பட்டியல் முன்பு ஓவியக் கண்காட்சிக்கு வந்தவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil