தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்தவர் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ். இதனால், அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். தினம் மாலை 6 மணி ஆனவுடன், கொரோனா தொற்று தொடர்பான விவரங்களை மீடியாக்களிடம் விளக்கியதன் மூலம் கவனம் பெற்றார்.
பிறகு, வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரியாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 6,500ஐ தாண்டியது
பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராணியின் கணவரும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு சென்னை கொட்டிவாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் எல்.என்.வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட வெங்கடேசன் 1962 ஆம் பேட்ச் ஐ.பி.எஸ்.அதிகாரியாவார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து… 3 பேருந்துகள் எரிந்து நாசம்
இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை இயக்குநரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி.ராணி வெங்கடேசன் அவர்களது கணவரும், வணிக வரித்துறை செயலர் திருமதி.பீலா ராஜேஷ் அவர்களின் தந்தையுமான திரு.SN.வெங்கடேசன் அவர்கள் இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பீலா ராஜேஷ் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
எல்.என்.வெங்கடேசன் காவல்துறையில் உயர் பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்டவர் என்றும் காவல்துறையினருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil