scorecardresearch

பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது – பீகார் அதிகாரிகள் குழு பேட்டி

3,4 இடங்களில் பீகாரில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம் – கோவையில் பீகார் அதிகாரிகள் குழு தகவல்

பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது – பீகார் அதிகாரிகள் குழு பேட்டி
பீகார் அதிகாரிகள் குழு செய்தியாளர்களைச் சந்தித்தபோது

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பீகாரைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவிய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி கண்ணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் சுமார் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர்; அமைச்சர் சி.வி. கணேசன்

இந்த குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து சென்னை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது அங்கு தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்களுக்கான இடம், சுகாதாரம் நாள்தோறும் விடுதியில் வழங்கப்படும் உணவு, சம்பளம் மற்றும் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரப்பில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் தங்களது பணி பாதுகாப்பு மற்றும் தமிழகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது குறித்து பீகாரில் இருந்து வந்த குழு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

கோவை ஆட்சியர் தலைமையில் பீகார் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் தொழில் அமைப்பினர் உள்ளிட்டோரிடம் பீகார் குழுவினர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

பின்னர் பீகார் மாநில ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை, திருப்பூர் மாவட்டத்தை தொடர்ந்து கோவையில் ஆய்வு செய்துள்ளோம். கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். 3,4 இடங்களில் பீகாரில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். அவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் பகிர்ந்து கொண்டோம்.

வைரலான சில வீடியோக்கள் மூலம் பொய்யான தகவல்கள் பரவியது. அதை பார்த்து பயத்தில் இருந்தனர். அவர்களிடம் அதை எடுத்து கூறியுள்ளோம். வைரல் வீடியோக்கள் மூலமாக பயத்துடன் இருந்தனர். இப்போதும் பயம் கொஞ்சம் இருக்கிறது. இந்த வீடியோக்கள் பொய்யான வீடியோக்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டேக்ட் என்ற தொழில் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, கடந்த ஒரு சில தினங்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக பொய்யான வீடியோக்கள் பரவியது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் இருந்தனர். இது தவறான செய்தி என்ற விழிப்புணர்வை தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பீகாரில் உள்ள பெற்றோர்கள் இங்குள்ள தொழிலாளர்களை வர சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். பீகாரில் உள்ள மக்களிடம் இது பொய்யான செய்தி என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bihar officials says tamilnadu govt create awareness to north state workers at kovai

Best of Express