scorecardresearch

தமிழகத்தில் சுமார் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர்; அமைச்சர் சி.வி. கணேசன்

வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் விரைவில் ஐ.சி.யு துவக்கப்படும் – அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழகத்தில் சுமார் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர்; அமைச்சர் சி.வி. கணேசன்
அமைச்சர் சி.வி கணேசன் திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ) மருத்துவமனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கணேசன் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதல்வரின் உத்தரவுப்படி இன்று திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை மிக சுகாதாரத்தோடும் போதிய அளவு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்: சென்னையில் தனியார் பேருந்துகள்.. காரணம் இதுதான்.. அமைச்சர் விளக்கம்

தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவ மனையாக திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல் மருத்துவ பிரிவு மிக சிறப்பாக செயல்படுவதோடு தினமும் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் மகப்பேறு மருத்துவத்தை பொருத்தவரை மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

அமைச்சர் சி.வி கணேசன் திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்தார்

நான் ஆய்வு மேற்கொண்ட போது சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கையில் மாலை நேரங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது. எனவே, இங்குள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்படும்.

அதேபோல் ஐ.சி.யு என்று சொல்லக்கூடிய தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் ஒரு வார காலத்திற்குள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகள் உறுதுணையோடு அந்த தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

அமைச்சர் சி.வி கணேசன் திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பீஹார் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆய்வு குழு சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில் நேரடியாக வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள தொழிலாளர்கள் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இ.எஸ்.ஐ மருத்துவ துறையின் இயக்குனர் ராஜமூர்த்தி, செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister cv ganesan says 6 lakhs other state people works in tamilnadu at trichy