தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வர வேண்டும் என்றும், கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எனக்கு உரிமையில்லை என்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, ”கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி குறித்து மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பா.ஜ.க விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: இ.பி.எஸ்-க்கு போட்டியே இல்லை: மொத்தம் 221 மனுக்கள்; அத்தனையும் அவர் பெயரில்!
அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு பா.ஜ.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் தனது கருத்து தொடர்பாக விளக்கமளித்தார். “என்னுடைய கருத்து குறித்து தேசிய தலைவர்கள் பலரிடமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது என நான் நம்புகிறேன். அரசியல் களத்தில் நேர்மை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது தான் நேர்மை அரசியலின் அச்சாரம்.
தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை. நேர்மையான அரசியலை நடத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்க முடியும். இந்த கருத்தை எங்கள் கட்சியினரிடம் நான் பகிர்ந்துள்ளேன், அதில் உறுதியாகவும் உள்ளேன். எந்தக் கட்சிக்கும் நான் எதிரி இல்லை. நேர்மையான அரசியலை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சி அடையும். 2 ஆண்டுகளாக பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அனுபவத்தில் பேசுகிறேன். இனி வரும் காலங்களில் மிக தீவிரமாக பேச உள்ளேன். கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். எனது கருத்தில் 50 சதவீத பேருக்கு உடன்பாடும், 50 சதவீத பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது. ஆனால் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கருத்தைப் பற்றி இனி வரும் காலங்களில் ஆக்ரோஷமாகவும் பேச உள்ளேன்.
மீண்டும் சொல்கிறேன், கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எனக்கு உரிமையில்லை. அதற்கு பா.ஜ.க நாடாளுமன்ற குழு உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு தேர்தலை நடத்த ஆகும் செலவு மிக அதிகம், நான் போலீசில் 9 ஆண்டுகள் சம்பாதித்த எல்லா பணமும் அரவக்குறிச்சி தேர்தலில் சென்றுவிட்டது. அது எல்லாம் நான் குருவி போல சிறுகச்சிறுக சேமித்துவைத்தது. டீசல் போடவேண்டும்… பெட்ரோல் போட வேண்டுமென்று போய்விட்டது. தேர்தல் முடிந்தபின் சத்தியமாக நான் கடனாளியாகத்தான் இருக்கிறேன். தமிழ்நாடு அரசியலில் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் என்றால் 80 கோடி ரூபாயில் இருந்து 120 கோடி ரூபாய் வரை பணம் செலவு செய்யவேண்டுமென்பது பொதுவான கணக்கு. எல்லா கட்சியும் பணம் கொடுக்கிறது என்று நான் கூறவில்லை. இதை செய்துவிட்டு தூய்மையான அரசியல் என்று உங்களால் பேச முடியாது. 2 ஆண்டு பார்த்துவிட்டேன்… எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், தூய்மையான அரசியலுக்கு தமிழ்நாடு மக்கள் தயாராக உள்ளது என்பது என் உள்மனதில் உள்ளது,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil