100 கோடி மதிப்பிலான சொத்து பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என பா.ஜ.க இளைஞர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி. இவர் தமிழ்நாடு மாநில பா.ஜ.க இளைஞர் அணி துணைத் தலைவாராக உள்ளார்.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து: மோசடி புகாரில் அதிரடி
இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி மோசடியாக நிலம் பத்திரப் பதிவு செய்ததாக புகார் செய்யப்பட்ட நிலையில், அவரின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் உள்ள சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை நயினார் பாலாஜி மோசடியாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்து முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என்றும், இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது.
இந்நிலையில் விசாரணையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது உறுதியான நிலையில் ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார். புகார் குறித்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பத்திரப் பதிவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நயினார் பாலாஜி, ”சென்னையில் உள்ள சொத்துக்கு ராதாபுரத்தில் கிரய ஒப்பந்தம் செய்திருந்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 77ஏ பிரிவை பயன்படுத்தி எனது பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திர பதிவு தவறாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எங்களை நீதிமன்றத்திற்கு நாட சொல்லிவிட்டு தற்போது இதை ரத்து செய்துள்ளார்.
விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே தடையில்லா சான்று (என்.ஓ.சி) வாங்கியுள்ளோம். இளையராஜா என்பவரும் மோசடியான நபர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ரத்து செய்வதற்கு முன்பு என்னிடம் எதுவும் கேட்கவில்லை. இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். இந்த விவகாரத்திற்கும் எனது தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” இவ்வாறு நயினார் பாலாஜி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil