Advertisment

விக்டோரியா கௌரி நியமன விவகாரம்; பா.ஜ.க தடை செய்யப்பட்ட கட்சியா? ஆதரவாளர்கள் கேள்வி

விக்டோரியா கௌரி நியமனத்திற்கு எதிரான மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்; எதிர்க்கும் வழக்கறிஞர்கள் அவரது பா.ஜ.க தொடர்புகளைக் குறிப்பிடுகின்றனர், ஆதரவாளர்கள் அவருக்கு முன் அரசியல் தொடர்புள்ளவர்கள் நீதிபதியானதை குறிப்பிடுகின்றனர்

author-image
WebDesk
New Update
விக்டோரியா கௌரி நியமன விவகாரம்; பா.ஜ.க தடை செய்யப்பட்ட கட்சியா? ஆதரவாளர்கள் கேள்வி

49 வயதான லெக்ஷமனா விக்டோரியா கௌரி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

Arun Janardhanan

Advertisment

லெக்‌ஷ்மனா விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க இருப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லெக்‌ஷமனா விக்டோரியா கௌரியை (49)  நியமித்து திங்கள்கிழமை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

விக்டோரியா கௌரியின் நியமனத்திற்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரை, தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினரின் எதிர்ப்பிற்கு வழிவகுத்தது, அவர்கள் பா.ஜ.க.,வுடன் அவரின் முந்தைய தொடர்பை சுட்டிக்காட்டி, அவர் வெறுப்புணர்வை வெளிப்படுத்திய நிகழ்வுகளை சுட்டிக்காட்டினர். அதேநேரம் ஒரு பெண் வழக்கறிஞராக அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை சுட்டிக்காட்டி மற்றொரு குழு அவருக்கு ஆதரவளித்தது.

இதையும் படியுங்கள்: விக்டோரியா கவுரி ஐகோர்ட் நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; நாளை விசாரணை

விக்டோரியா கௌரி தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச்சில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக உள்ளார். 2020 செப்டம்பரில் அவர் பதவியேற்பதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க.,வின் அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ததாக அவர் கூறுகிறார்.

2019 ஆகஸ்டில் பா.ஜ.க.,வில் சேர்ந்த விக்டோரியா கௌரி, சுமார் ஒரு வருடம் உறுப்பினராக இருந்தார். அப்போது அவரது ட்விட்டர் பக்கம் ‘சௌகிதார் விக்டோரியா கௌரி’ என இருந்தது, மேலும் அவரை பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக அடையாளம் காட்டியது. இப்போது பல நாட்களாக ஆஃப்லைனில் உள்ள, அவரது ட்விட்டர் டைம்லைனில் பெரும்பாலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பதிவுகளின் ரீட்வீட்கள் இடம்பெற்றுள்ளன.

21 மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அவரை நீதிபதியாக உயர்த்துவதற்கு ஆட்சேபனைகளை எழுப்பி, இந்திய ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதி, அவரது இரண்டு YouTube நேர்காணல்களையும் 2012ல் வெளிவந்த ஆர்கனைசர் கட்டுரையையும் மேற்கோள் காட்டியுள்ளனர். அவர் இஸ்லாத்தை "பச்சை பயங்கரம்" மற்றும் கிறித்தவத்தை "வெள்ளை பயம்" என்று ஒப்பிட்டதாக அவர்கள் கூறுகின்றனர், மேலும் ஹிந்து கலாச்சாரம், பரதநாட்டியம் போன்ற கலை வடிவங்களை "ஒப்பீடு செய்ததற்காக" கிறிஸ்தவ குழுக்களை விமர்சிக்கும் அவரது கருத்துக்களையும் குறிப்பிடுகின்றனர்.

"வெறுக்கத்தக்க பேச்சு" தொடர்பாக ஐ.பி.சி.,யின் 153A, 153B, 295A மற்றும் 505 பிரிவுகளின் கீழ் விக்டோரியா கௌரி மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர்கள் கோரினர். ஞாயிற்றுக்கிழமை அவரது கருத்துக்களைப் பெற தொடர்பு கொண்டபோது, ​​​​விக்டோரியா கௌரி பேச மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பார் கவுன்சிலின் பெரும் பகுதியினரின் ஆதரவும் விக்டோரியா கௌரிக்கு உண்டு. அவரை ஆதரிக்கும் சுமார் 50 வழக்கறிஞர்கள், வலுவான அரசியல் கருத்துக்களைக் கொண்ட வழக்கறிஞர்கள் முன்பு நீதிபதிகளாகி, பாரபட்சமின்றி தங்கள் கடமைகளைச் செய்ததாக பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டுகின்றனர்.

ஒரு வழக்கறிஞர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்: "அவர் பா.ஜ.க.,வின் உறுப்பினராக இருந்தார், அது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கட்சியா?"

விக்டோரியா கௌரி கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்கு தீவிர இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வலுவான ஆதரவாளர்கள் உள்ளனர் என்றும் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறினார். “அவரது கருத்துக்கள் ஒரு சராசரி பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களின் கருத்துகளைப் போலவே இருந்தன. அவரது பதவி உயர்வுக்குப் பிறகு அவரது நடத்தை முக்கியம், அதற்கு முன் பேசிய அவருடைய கருத்துக்கள் முக்கியம் அல்ல,” என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.

விக்டோரியா கௌரியின் மாணவப் பருவத்தில் அவரது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு, ஒருபோதும் ரகசியமாக இருந்ததில்லை என்று அவரது மதுரை பார் சகாக்களும் சுட்டிக்காட்டுகின்றனர். மற்றொருவர், அவர் ஒரு மிகச்சிறப்பான வழக்கறிஞராக இல்லாவிட்டாலும், "அவர் சராசரிக்கும் குறைவாகவும் இல்லை" என்றும் அவரது நல்ல வாதங்களுக்காக அறியப்பட்டவர் என்றும் கூறினார். மேலும், "அவரது அரசியல் அனுதாபங்களை நாங்கள் அறிந்துள்ளோம், மேலும் அவர் 2020 இல் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டது அவர் நீதிபதியாக வருவார் என்பதற்கான குறிகாட்டியாகும்," என்றும் அந்த வழக்கறிஞர் கூறினார்.

கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமனம் என்பதும் தவறான செயலல்ல. எஸ்.ரத்னவேல் பாண்டியன், உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு முன், தி.மு.க.,வின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்தார். விக்டோரியா கௌரிக்கு இணையான ஒரு உதாரணத்தில், மற்றொரு பெண் வழக்கறிஞர் வி.எம்.வேலுமணி அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர் ஜெ.ஜெயலலிதா கட்சி நாளிதழில் வெளியிட்ட செய்தியில், வி.எம்.வேலுமணி கட்சியில் இருந்து விலகுவதாகவும், நீதிபதி பதவிக்கு அவரது பெயர் தெளிவாக இருப்பதாகவும் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் போன்றோரின் நியமனம் தடுக்கப்பட்டது. அவர் மாநிலத்தில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராகப் போராடியதால், சமூக நீதிக்கு எதிரானவர் எனக் கூறி அவரை நீதிபதியாக உயர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு, சில குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இறுதியில், அவரது பெயரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது.

ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, அப்போதைய தலைமை நீதிபதி எம்.என்.சந்துர்கருக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பதாகவும், நாக்பூரில் எம்.எஸ்.கோல்வால்கரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றப் பதவி உயர்வு மறுக்கப்பட்டது, என்பதை நினைவுக் கூர்ந்தார்.

விக்டோரியா கௌரியின் விவகாரம் மோசமானது என்று நீதிபதி சந்துரு வாதிடுகிறார். ஏனெனில் ஆட்சேபனை அவர் ஒரு அரசியல் கட்சியில் அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதற்காக மட்டுமல்ல, அவரது "வெறுக்கத்தக்க பேச்சுகள்" மற்றும் "ஆட்சேபனைக்குரிய" எழுத்துக்கள் காரணமாக, என்று நீதிபதி சந்துரு கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment