பொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் - அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி
Chennai News: சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகர ஆணையர் அதனை நிராகரித்துள்ளார்
Chennai News: சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகர ஆணையர் அதனை நிராகரித்துள்ளார்
Boat Club residents, போட் கிளப், சென்னை மாநகராட்சி, தமிழக செய்திகள், tamil news, latest tamil news, chennai news
பெரும் புள்ளிகள் அதிகம் வசிக்கும் சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் அதனை நிராகரித்துள்ளார்.
Advertisment
சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும் சாலை சென்னை போட் கிளப் சாலையாகும். இந்த சாலையில் பிசிசிஐ முன்னாள் தலைவர் மற்றும் தொழிலதிபரான என் சீனிவாசன், டிவிஸ் குழும அதிபர்கள், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், முருகப்பா, எம் ஆர் எஃப் குழும அதிபர்கள் என பெரும் புள்ளிகள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள சாலைகள் எப்போதும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்படுவது வழக்கம். இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளோர் பலரும் இங்கு தங்கள் தினசரி நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சியை மேற்கொள்வார்கள். தற்போது கொரோனா அச்சம் நிலவுவதால் இங்கு வசிப்போர் யாரும் வீட்டை விட்டே வருவதில்லை என்பதால் சாலைகள் காலியாக உள்ளன. எனவே பலரும் இங்கு நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி வாசிகளின் சங்கம் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று சென்னை ஆணையருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. சங்கத் தலைவர் ரவி அப்பாசாமி கையெழுத்து இட்டுள்ள இந்த கடிதத்தில், ”ஊரடங்கு நேரத்தில் இங்கு வசிக்காத பலரும் தங்கள் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளை இங்கு வந்து செய்கின்றனர். அறிமுகமற்றோரின் வாகனங்கள்ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் வேளையில் இவ்வாறு இவர்கள் எங்கள் பகுதியில் பயிற்சிகள் செய்வது மிகவும் தவறானதாகும். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இது சமூக இடைவெளிக்கு எதிரானது. எனவே இந்த சாலை நுழைவாயிலில் ஒரு பெரிய கேட் அமைத்து சாலைக்குள் வெளியாட்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது நகரில் உள்ள பல ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து வழக்கறிஞர் ரமேஷ், “இந்த கோரிக்கை சட்ட விரோதமானது. மக்களை இந்த பகுதிக்குள் நடமாட விடாமல் தடுக்க இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இந்த சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானது. இதில் அவர்களுடைய மேல் தட்டு மனப்பான்மையைக் காட்டக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்வலர் ராதிகா கணேஷ் கூறுகையில், "கொரோனா பாதிப்பு எவ்வாறு பொருளாதார வேறுபாட்டில் விளையாடுகிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இது பல வருடங்களாகப் போராடிப் பெற்ற சமூக நீதிக்கு எதிரானது. முன்பு ஆதிக்க வாதிகளால் நடத்தப்பட்ட அடக்குதல் தற்போது பணம் படைத்தோர் மற்றும் நகரவாசிகளால் நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஆர்வலரான சுரேஷ், ”பொது இடங்களில் மக்கள் நடமாடுவதைத் தடுத்து கேட் அமைப்பது சட்டத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் அதனை நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவர்கள் கோரியபடி அனுமதி அளிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை, சென்னை கார்ப்பரேஷனை அணுகும்படி அவர்களுக்குஅறிவுறுத்தினோம்" என்றார். மற்றொரு போலீஸ் அதிகாரி கூறுகையில், இப்பகுதியில் உள்ள சாலைகள் சென்னை கார்ப்பரேஷனால் பராமரிக்கப்படுகின்றன. எனவே கேட் அமைக்க அவர்கள் கோரியது ஏற்கத்தக்கது அல்ல" என்றார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ், ஒரு சில குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு வசதி அளிக்க இதுபோன்ற தனி கேட்களை அனுமதிக்க முடியாது என்று கூறினார். கோவிட் -19 கட்டுப்பாட்டைப் பற்றி போட் கிளப் குடியிருப்பாளர்களின் புரிதல் தவறானது என்று அவர் கூறினார். “குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களால் மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அத்தகைய சிறப்பு சலுகைகள் ஏதும் சட்டத்தில் இல்லை" என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news