Cambodian school system announced Thirukkural syllabus: கல் தோன்றி மண் தோன்றா மூத்த காலத்து மொழி எங்கள் மொழியாம் என்பதில் தான் எத்தனை பெருமை விளைகிறது. ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிக மக்களால் பேசப்பட்டு வரும் மொழியாகவும், இலங்கையின் அலுவல் மொழியில் ஒன்றாகவும் இருக்கிறது தமிழ்.
இன்று நுழைவு தேர்வினை தமிழில் எழுதவும், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் பெறவும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், கம்போடியா அரசு தமிழ் மக்கள் மனம் குளிரும் வகையில் ஒரு செய்தி ஒன்றை கூறியுள்ளது. மிகவிரைவில் தமிழுக்கான முழு அங்கீகாரம் கம்போடியாவில் வழங்கப்படும் என்று சமீபத்தில் எழுந்த பேச்சுகளை தொடர்ந்து, கம்போடிய அரசு தங்களின் மாணவர்களுக்கு திருக்குறளை போதிக்க உள்ளது.
உலக பொதுமறை என்றும், சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைவருக்கும் பொதுவான ஒரு படைப்பாக இருக்கும் திருக்குறளை அந்நாட்டுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இணைத்திருக்கிறது அந்நாட்டு அரசு. அங்கோர் தமிழ் சங்கம் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் சமீபமாக ராஜேந்திர சோழன் மற்றும் கெமர் நாட்டு அரசர் முதலாம் சூர்யவர்மன் ஆகியோருக்கு 2022ம் ஆண்டு சிலை திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கம்போடிய கலாச்சார அமைச்சத்தின் பிரதிநிதியான பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்பின் தலைவர் தணிகாச்சலம், திருக்குறள் தமிழில் இருந்து கெமெர் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைக்கப்படும் என்று அறிவித்தார். தமிழக மற்றும் கெமர் பேரரசர்களின் நட்புறவுகளை பாராட்டு விதமாகவும், நினைவு கூறும் விதமாகவும் இவ்வேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.
ராஜேந்திரன் சோழனின் சிலையை திறக்க நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்றும், இரு நாடுகளில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். இந்த சிலைகள் சுமார் 25 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட உள்ளது. காஞ்சி, சிதம்பரம், தஞ்சை மற்றும் மல்லையில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை!