தி.மு.க முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 இல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.
தி.மு.க.,வின் அசைக்க முடியாத சக்தியாகவும் உலக நாடுகளில் தொழில்களை விரிவுபடுத்தியவருமான ராமஜெயம் கட்சிக்கும் திருச்சிக்குமே பிரம்மாண்டமாக தெரிந்தார். அவரது வரையறுக்கப்படாத எல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 2011இல் பிரச்சாரம் செய்த அப்போதைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் ராம ஜெயத்தின் அடாவடிகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றார்.
இதையும் படியுங்கள்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள்; தேடும் பணி தீவிரம்
இந்தநிலையில் அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டில் ராமஜெயம் மிகவும் மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டு காவிரி கரையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது, தமிழகத்தையே அதிர வைத்தது. இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என பல கட்டங்களில் நகர்ந்து இறுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது மீண்டும் சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களாக விசாரணையை துரிதப்படுத்திய சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷகில் அக்தர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு, ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறைக்கு வெளியில் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இவ்வழக்கில் 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் முக்கிய விசாரணை நகர்வு கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது.
இதில், சில ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பது குறித்து ஆராய சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷகில் அக்தர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி வந்தார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் காவல்துறையினருடன் ஷகில் அக்தர் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இறுதி கட்டமாக 12 பிரபல ரவுடிகளின் பட்டியல் வெளியிட்டு, அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
அந்த வகையில் திருச்சியை மட்டுமல்ல தமிழகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த பிரபல ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திருச்சி சாமி ரவி, சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கின்ற லட்சுமி நாராயணன், தேன்கோவன் என்ற சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன் உள்ளிட்ட 12 நபர்களின் பட்டியலை சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி மதன், ஆய்வாளர் ஞானசேகர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த 12 பிரபல ரவுடிகளையும் தங்கள் கஸ்டடியில் வைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் ஓரிரு நாட்களில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தவிருக்கின்றனர். இந்த உண்மை கண்டறியும் சோதனையில் குற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil