சென்னை துறைமுகத்தின் ரூ.100 கோடியை நூதனமாக திருடிய வழக்கு; 2 வெளிநாட்டினர் கைது

காமராஜர் துறைமுக அறக்கட்டளை, சென்னை துறைமுக அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஆவணங்கள், வங்கி வைப்பு நிதி தொடர்பான ஆவணங்கள், இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு துறைகளின் இலச்சினைகள் ஆகியவற்றை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

Chennai Port Trust fraud case : சென்னை துறைமுக அறக்கட்டளை இந்தியன் வங்கியில் வைத்திருந்த ரூ. 100 கோடி வைப்பு நிதியை நூதனமாக, முன்கூட்டியே மோசடி மூலமாக திரும்பிப் பெற்ற வழக்கில் இரண்டு வெளிநாட்டினரை கைது செய்துள்ளது மத்திய புலன் விசாரணை முகமை.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் கேமரூன் நாட்டை சேர்ந்த பௌசியோமோ ஸ்டீவ் பெட்ராண்ட் யான்னிக் மற்றும் காங்கோ நாட்டைச் சேர்ந்த மௌசா இலுங்கா லூசியன் என்ற போ போ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் தேடுதல் வேட்டை நடத்திய சி.பி.ஐ. இரண்டு வெளிநாட்டினரை கைது செய்தது. இருவரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டுகளை வழங்கவில்லை. தேடுதல் வேட்டையின் போது லேப்டாப், மொபைல் போன்கள், கேமராக்கள், ப்ரிண்டர், காமராஜர் துறைமுக அறக்கட்டளை, சென்னை துறைமுக அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஆவணங்கள், வங்கி வைப்பு நிதி தொடர்பான ஆவணங்கள், இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு துறைகளின் இலச்சினைகள் ஆகியவற்றை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இந்தியன் வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி அன்று சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மோசடி, ஆள்மாறாட்டம், வங்கியில் இருந்து ரூ. 100 கோடி பணத்தை பெற ஏமாற்றும் நோக்கில் ஆள்மாறாட்டம் செய்தது போன்ற குற்றங்கள் அப்போதையை இந்தியன் வங்கியின் கோயம்பேடு மேலாளர் மற்றும் இரண்டு தனி நபர்கள் மீது சாட்டப்பட்டது.

சென்னை துறைமுக அறக்கட்டளையின் பெயரில் கணக்கு ஒன்றை துவங்கி ஏற்கனவே அதில் இருந்து பல நிரந்தர வைப்பு நிதிகளை முன்கூட்டியே மூடியதன் காரணமாக இண்டியன் வங்கிக்கு மேலும் ரூ. 45.40 கோடி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டும், அதே அளவு நிதியை பல கணக்குகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டும் அவர்கள் மீது சாட்டப்பட்டது.

சென்னை துறைமுகம் மற்றும் இந்தியன் வங்கியை ஏமாற்றி கோயம்பேடு வங்கிக் கிளையில் 45க்கும் மேற்பட்ட டெர்ம் டெபாசிட்டுகளை மார்ச் 2020 மற்றும் மே 2020க்கு இடைப்பட்ட காலங்களில் உருவாக்கியதாக ஒரு நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்றொரு நபர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் போன்று ஆள்மாறாட்டம் செய்து கோயம்பேடு வங்கிக் கிளையில் சி.பி.டி. பெயரில் போலியாக நடப்பு கணக்கை துவங்கியுள்ளார் என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.

மேலும் படிக்க : இந்தியன் வங்கி வைப்பு நிதி ரூ.100 கோடியை திருப்பி தர வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் சென்னை துறைமுகம் வழக்கு

சிபிஐ -யின் கூற்றுப்படி, சிபிடியால் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு எதிராக வங்கி கால வைப்பு ரசீதுகளை (பத்திரங்கள்) உருவாக்கியது மற்றும் பத்திரங்கள் நேரடியாக வங்கியிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களால் பெறப்பட்டது. சிபிடிக்கு அசல் பத்திரங்களை வழங்குவதற்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நகல் பத்திரங்களை உருவாக்கி, போலி பத்திரங்களை சிபிடிக்கு சமர்ப்பித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.

டெர்ம் டெபாசிட்டுகளை உருவாக்கிய சில நாட்களிலேயே ஒன்றன் பின் ஒன்றாக டெர்ம் டெபாசிட் கணக்குகளை மூடினார்கள் என்றும் சி.பி.ஐ. அறிவித்துள்ளது. டெர்ம் டெபாசிட்களை மூடுவதற்கு முன்பு அதில் இருந்த பணம் மொத்தமாக சி.பி.டி பெயரில் உருவாக்கப்பட்ட போலி நடப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது. அதே போன்று மேலும் 27 இதர வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

சி.பி.டியின் வைப்பு நிதியில் இருந்த 100.57 கோடி ரூபாய் பணம் ஐந்து முதலீடுகளில் செலுத்தப்பட்டது. மோசடி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ரூ. 55.19 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ. 45,40,65,000 பணம் குற்றம் சாட்டப்பட்டவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதற்கு முன்பு 9 நபர்களை கைது செய்துள்ளது சி.பி.ஐ. அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். முன்னதாக சென்னை , நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட 22 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது என்று விசாரணை முகமையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbi arrests two foreigners in chennai port trust fraud case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com