உடலுக்கு வலு சேர்க்க கூடிய முருங்கைக் கீரை சட்னி வாரத்தில் இருமுறை சாப்பிட்டால் எந்த நோயும் உடலை அண்டாது. அப்படிப்பட்ட முருங்கைகீரையை செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். முருங்கை கீரை சட்னி செய்வது பற்றி பாட்டி ஒருவரிடம் கேட்டு செஃப் தீனா கிச்சன் யூடியூப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முருங்கை இலை - 2 கைப்பிடி அளவு
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 3 எண்கள்.
புளி - ஒரு எலுமிச்சை அளவு
சீரகம் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 எண்கள்.
கொத்தமல்லி விதைகள் - 3 டீஸ்பூன்
உப்பு - சுவைக்க
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
கடலை எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில் கடலை எண்ணெயை ஊற்றி அது காய்ந்த உடன் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதில் முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயத்துடன் சேர்த்து கீரை பொரிந்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
முருங்கைக்கீரை இலை சுருண்ட நிலையில் இருக்கும் போது அதில் கருவேப்பிலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின்னர் அதில் நறுக்கிய தக்காளி பழத்தையும் சேர்க்க வேண்டும். அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்க வேண்டும்.
ஐந்து நிமிடம் நன்றாக வதக்கிய பிறகு வர மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பாத்திரத்தில் போடப்பட்ட முருங்கைக்கீரை கொத்தமல்லி சீரகம் வெங்காயம், தக்காளி என அனைத்து பொருட்களும் நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி தழையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வதக்கிய பொருட்களை ஆற வைத்து அதனுடன் தேவையான அளவு புளி மற்றும் உப்பை சேர்த்து அம்மி அல்லது உரலில் அரைக்க வேண்டும்.
தெரியாத ரெசிபி, ஈரோடு ஆயா சொல்லிக்கொடுத்த MURUNGAIKEERAI CHUTNEY | CDK 1682 |Chef Deena's Kitchen
மிக்ஸியில் அரைப்பதை விட இது மாதிரி அம்மி அல்லது உரலில் அரைப்பது நல்ல சுவையை கூட்டி தரும். 90 சதவீதம் அரைத்த பிறகு அதை எடுத்து கம்மஞ்சோறு, சுடு சாப்பாடு, தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.
இந்த சட்னி செய்யும் போது கவனிக்க வேண்டியது சிறிய வெங்காயத்தை மட்டும் தான் சேர்க்க வேண்டும். அதேபோல் அனைத்து பொருட்களும் நன்றாக எண்ணையில் வதங்க வேண்டும் பச்சை வாசம் நீங்கும் அளவிற்கு வதக்கினால்தான் சுவையும் நன்றாக இருக்கும். அரைவேக்காட்டுடன் சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. முருங்கைக்கீரையை காம்புடன் போடக் கூடாது.