Chennai corporation final results will be on afternoon: தமிழகத்தைப் பொறுத்தவரை, தலைநகரான சென்னையில் வெற்றி பெறுவது யார் என்பதில் கடும் போட்டி இருந்தது. இருப்பினும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, சென்னையை மீண்டும் திமுகவின் கோட்டையாக மாற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இறுதியாக திமுக கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியை, 2011 க்குப் பிறகு மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இதில் திமுக தனித்து 153 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்தில், திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுக 15 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1 இடத்திலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
முன்னதாக சென்னை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து,நேற்று (பிப்ரவரி 21) செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும். முதலில் 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு வார்டின் எண்ணிக்கையும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் பிற்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மூன்று தேர்தல் நுண் பார்வையாளர்கள் இருப்பார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் 7,200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்” என்று கூறினார்.
சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையங்களைப் பொறுத்தவரை, வார்டு 1 முதல் 14 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை எண் 714ல் உள்ளது. வார்டு 15 முதல் 22 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் மணலி, பாடசாலை தெருவில் உள்ளது. வார்டு 23 முதல் 33 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் அம்பத்தூர்-ரெட் ஹில்ஸ் ரோடு, சூரப்பேட்டையில் உள்ளது. வார்டு 34 முதல் 48 வரை வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் காமராஜ் நகர், ஆர்.கே. நகரில் உள்ளது. வார்டு 49 முதல் 63 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் பிரகாசம் சாலையில் உள்ளது. வார்டு 64 முதல் 78 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கத்தில் உள்ளது. வார்டு 79 முதல் 93 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் முகப்பேர் மேற்கில் உள்ளது. வார்டு 94 முதல் 108 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் ஈவிஆர் பெரியார் சாலையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் உள்ளது.
இதையும் படியுங்கள்: 21 மாநகராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
வார்டு 109 முதல் 126 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு லயோலா கல்லூரியில் உள்ளது. வார்டு 127 முதல் 142 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் தெரு மீனாட்சி பொறியியல் கல்லூரியில் உள்ளது. வார்டு 143 முதல் 155 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் மதுரவாயல் அடையாலாம்பட்டு பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் உள்ளது. வார்டு 156 முதல் 167 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் 33, பொன்னியம்மன் கோயில் தெரு, ஆலந்தூரில் உள்ளது. வார்டு 168 முதல் 180 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் சர்தார் படேல் சாலை, கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளது. வார்டு 181 முதல் 191 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் உள்ளது. வார்டு 192 முதல் 200 வரையிலான வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் மையம் சோழிங்கநல்லூர் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளது.
மேலும், திங்கட்கிழமை வரை மொத்தம் 14,000 தபால் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளதுடன் 6867 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குப் பிறகு பெறப்படும் தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ககன்தீப் சிங் பேடி கூறினார்.
ஒவ்வொரு 15 மண்டலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஐஏஎஸ் அதிகாரிகளால் கவனிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேசையிலும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூம்களிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் முகவர்கள் காலை 7 மணிக்கு வர வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல வாக்கு எண்ணும் முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் 3,634 போஸ்டர்கள் அகற்றப்பட்டு ₹2.55 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 160 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 26.95 லட்சம் ரொக்கம் மற்றும் ₹1.27 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
இதனிடையே, நேற்று சென்னை மாநகராட்சியில் இரண்டு வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவில், பழைய வண்ணாரப்பேட்டையில் 29.9%, பெசன்ட் நகரில் 47.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில், சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு இன்று தொடங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.