ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதே நமது கடமை : இந்திய கம்யூனிஸ்ட் ஆவேசம்
இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், அவர் பெயர் சேர்க்கப்பட்டதற்கும் தடை விதிக்க கோரி விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததிலிருந்து மக்களிடையே எனக்கு நற்பெயர் உள்ளது, இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் சாட்சியாக என்னை விசாரணை செய்ய அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளுக்கும், அதனை யாரும் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும். எனது பெயர் பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளை ரத்துச் செய்ய வேண்டும் என்று விஜயபாஸ்கர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil