திருமணத் தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் டாக்டரை திருமணம் செய்வதாகக் கூறி 80 சவரன் நகை, ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக சென்னை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரசன்னா என்ற சக்கரவர்த்தி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சக்கரவர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள்: ‘நான் கலைஞரிடம் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம்’: பள்ளி விழாவில் குட்டி ஸ்டோரி சொன்ன கனிமொழி
இந்த மனு இன்று நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், சக்கரவர்த்தி சக்ரவர்த்தி வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்து ஆனவர்களை குறிவைத்து மோசடி செய்து வருகிறார். இதுவரை 17-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரி பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சக்கரவர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நீதிபதி தனது உத்தரவில் திருமண தகவல் இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுவதாகவும், இணையதளங்களை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், திருமண இணையதளங்களில் பதிவு செய்பவர் பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால் இது போன்ற மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். பின்னர், திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil