முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
2001-2006 அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பி.எஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓ.பி ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டில் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: அரசு வழக்குரைஞர்கள் கட்டண பாக்கி: இந்த உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.. ஐகோர்ட் கடும் எச்சரிக்கை
இந்தநிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக, தி.மு.க அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து மேல்முறையீடு செய்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த நிலையில், அடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.