scorecardresearch

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில்; சேவை எப்போது தொடங்கும்? பயண நேரம் என்ன?

வந்தே பாரத் ரயில் சேவை வருகின்ற 8 ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதியம் 2.00 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்

Vande Bharat Kovai
சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை

சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை  8 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நேரில் தொடங்கி வைக்கிறார். இதற்கிடையே கடந்த 30 ஆம் தேதி சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை இரண்டாவது முறையாக வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி காலை 5.40 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களைக் கடந்து காலை 11.40 மணியளவில் கோவை ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் வந்தடைந்தது.

இதையும் படியுங்கள்: இந்தியாவின் மக்கள் பரவலை மாற்றினால் அரசியலமைப்பு அழிந்து விடும்; சென்னை ஐகோர்ட் நீதிபதி

சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை

அந்த ரயிலில் ரயில்வே முக்கிய அதிகாரிகள் வந்தனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து 12.10 மணி அளவில் புறப்பட்டு திருப்பூர், சேலம் ரயில் நிலையங்களில் சிறிது நேரம் நின்று சென்றது. கடந்த முறை நிற்காமல் சென்ற ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மாலை 4 மணி அளவில் ஒரு நிமிடம் மட்டும் நின்று மாலை 6.10 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று அடைந்தது. இரண்டாவது சோதனை ஓட்டத்தில் அரை மணி நேரம் முன்னதாக 6.10 மணியளவில் சென்னை சென்றடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வந்தே பாரத் ரயில் சேவை வருகின்ற 8 ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதியம் 2.00 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் மற்ற ரயில்களை விட குறைவான நிறுத்தம் மற்றும் அதிக வேகம் காரணமாக பயண நேரம் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai kovai vande bharat train second testing completed