அரசியலமைப்பு ஆவணம் உருவாக்கப்பட்ட போது இருந்த நாட்டின் “மக்கள்தொகை விவரம்” மாற்றப்பட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல் போய்விடும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கூடுதலாக விரிவாக கூறவில்லை என்றாலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “இந்திய பாரம்பரியம் மற்றும் தர்மத்தின் கீழ் உள்ளவர்கள்” இருக்கும் வரை அரசியலமைப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்: நெல்லை மாட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நீதிபதி சுவாமிநாதன், அரசியலமைப்புச் சட்டம் “அனைவருக்கும் இறுதியானது” என்றார். மேலும், “…பி ஆர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு… இதை சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் அரசியலமைப்பு என்றென்றும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால், அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது இருந்த மக்கள்தொகை விவரமும் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“மக்கள்தொகை விவரம் மாற்றப்பட்டால், அரசியலமைப்பு இல்லாமல் போய்விடும். எனவே அரசியலமைப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்றால் மக்கள்தொகை விவரமும் அப்படியே இருக்க வேண்டும். அது நடக்க வேண்டுமானால், இந்திய பாரம்பரியத்தையும், இந்திய தர்மத்தையும் பின்பற்றுபவர்கள் அதே மரபில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது (அரசியலமைப்புச் சட்டம்) பாதுகாக்கப்படும், ஒரு நீதிபதியாக, இதற்கு மேல் என்னால் பேச முடியாது… நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்,” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
கருத்துகளை வெளியிடுவதற்கு முன், நீதிபதி சுவாமிநாதன் ஒரு வகையான எச்சரிக்கையை விடுத்தார். அவர் பார்வையாளர்களிடம், “இது (பேச்சு) சற்று சர்ச்சைக்குரிய பார்வையாக மாறும், ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை…” என்று அவர் கூறினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உரையில், தமிழ் மீது தங்களின் அன்பைப் பெருமிதம் கொள்ளும் பலர் “பெரும்பாலும் மொழி பற்றிய குறைந்த அறிவைக் கொண்டுள்ளனர்” என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil