சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தீயணையப்புத் துறை கூடுதல் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் 15 தளங்களைக் கொண்ட எல்.ஐ.சி. கட்டடம் உள்ளது. 70 வருடங்களைக் கடந்து கம்பீரமாக நிற்கும் இந்தக் கட்டடம், சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகும்.
இதையும் படியுங்கள்: நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்; இ.பி.எஸ் சூசகம்
இந்நிலையில் சென்னை எல்.ஐ.சி. கட்டடத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் தீ பிடித்து எரியத் தொடங்கியது. தீ பற்றி எரிவதைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அரைமணி நேர போராட்டத்திற்கு பின் கட்டடத்தில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை தினம் என்பதால், இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தீயை அணைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர், எல்.ஐ.சி கட்டடத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. பொருட்சேதங்கள் அதிக அளவில் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்துக்களை முன்கூட்டியே தடுக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம், என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil