‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் மழை பெய்யும்’, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கஜா புயல், தமிழகத்தில் சோக வடுக்களை பதிவு செய்துவிட்டு போயிருக்கிறது. குறிப்பாக, டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு சென்றிருக்கிறது.
இந்தநிலையில், வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (நவ.19) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிறு (நவ.18) மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.
இது ஞாயிறு மற்றும் திங்கள் கிழமையில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடனேயே காணப்படும். திங்கள் மற்றும் செவ்வாய் அன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஞாயிறு (நவ.18) மற்றும் திங்கள் (நவ.19) ஆகிய தேதிகளில், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் திங்கள் (நவ.19), செவ்வாய் (நவ.20) ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.
வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 18-ம் தேதியும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 19-ம் தேதியும், 20-ம் தேதியும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.
தமிழக பகுதிகளை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ‘கஜா’ புயல், தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து கேரளா பகுதிகளை தாண்டி தற்போது மீண்டும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைகொண்டு உள்ளது.
இது, அடுத்து வரும் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு நேரடி பாதிப்பு கிடையாது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு" என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க - கஜா புயலால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் இழப்பீடு அறிவிப்பு