Chennai CAA Protest : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பலவற்றை பாதித்துள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதால், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், மால்கள், திரையரங்குகள், ஜிம்கள் உள்ளிட்டவற்றை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ 50: கூட்டத்தை குறைக்க அதிரடி
தவிர இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவின் தக்கத்தை மனதில் வைத்து இத்தகைய போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு மாதத்தைக் கடந்தும் சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெண்கள் போராடி வந்தார்கள். சென்னை ஷாகீன் பாக் என்றழைக்கப்பட்ட அந்த போராட்டமும், கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தற்போது போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
அவர்களது முகநூல் பதிவில், “சென்னை வண்ணாரப்பேட்டை
ஷாகின்பாக் போராட்டம் கடந்த மாதம் 14-ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை (33 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு CAA NRC NPR-ஐ திரும்பப் பெறவேண்டும், தமிழக அரசு அவற்றை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு நம்முடைய போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தினை வீரியமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். ஆயினும் உலகெங்கிலும் தற்சமயம் பரவி வரும் கொரோனா நோய் தொற்று தற்போது இந்தியாவையும் வெகுவாக தாக்க தொடங்கியுள்ளது.
இந்த அசாதரண சூழலையும் நாட்டின் நன்மையையும் கருத்தில் கொண்டு, நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் CAA NRC NPR-க்கு எதிரான தொடர் போராட்டத்தினை தற்காலிகமாக தள்ளி வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக முடிவு தான். எதிர்வரும் காலத்தில் மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை வீரியமாக போராட்டத்தினை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்காக துள்ளி எழுந்த ராகுல்காந்தி: லோக்சபாவில் விவாதம்
இது நாள் வரை போராட்ட களத்தில் வீரியமுடன் முன்னின்ற பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் போராட்ட குழு நன்றியினை தெரிவித்து கொள்கிறது” என சென்னை ஷாகீன் பாக் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"