Chennai water scarcity TN government fetches water from Jolarpettai : சென்னையில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டுச்சக்கரக்குப்பம் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் எடுத்துவர ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வந்தன. இந்த திட்டத்திற்காக ரூ.65 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் ஒட்டுமொத்த மேற்பார்வை பணிகளையும் ரயில்வே மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் பார்த்தனர்.
ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு, பெட்டிகளில் நீர் நிறைப்பதற்கான அத்தனை வேலைகளையும் முடிவுற்ற நிலையில் இன்று இதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் ஓரிரு நாட்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறையாக இந்த திட்டத்தை துவங்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள
ஜோலார்பேட்டையில் இருந்து பெறப்படும் நீரானது வில்லிவாக்கம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, கீழ்பாக்கத்தில் அமைந்திருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு பின்னர் மத்திய சென்னையில் இருக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.