chennai weather :தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெப்பம், இயல்பை விட அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர்,திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெயிலால் வாடும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: Chennai Weather: கன்னியாகுமரி - ஊட்டி மழை, சென்னையில் மேகமூட்டம்
இன்று சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுவதால்,தென் தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. நாமக்கல்லில் 8 செமீ, கன்னியாகுமரி கோதையாறில் 7 செமீ, கொடைக்கானலில் 6 செமீ, மஞ்சளாறில் 5 செமீ, வேடசந்தூரில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது.