chennai weather today : தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்றின் தீவிரம் தொடர்ந்து வருகிறது இதனால் நீலகிரி, சேலம், ஊட்டி போன்ற இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதே போல், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கு பல பகுதிகளில் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. இதுதவிர, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து இருக்கிறது.
மாலை நேரங்களில் மழை வருவது போல் சென்னையில் வானிலை மாறுகிறது. ஆனால் காலை நேரங்களில் முகத்தில் சுள்ளென்று அடிப்பது போல் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், மழையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன். அவர் கூறியிருப்பதாவது.
“ மேற்கில் இருந்து வீசிய காற்றினால் கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு ஓரளவு மழை இருந்தது. தற்போது அந்த காற்று குறைந்துவிட்ட நிலையில், வருகிற 17-ந் தேதி முதல் கிழக்கில் இருந்து காற்று அதிகம் வீச இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 17 (நாளை) மற்றும் 18-ந் தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.
இதனால் கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும்.தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். பகலில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியும் வெப்பநிலை பதிவாகக் கூடும்” என கூறியுள்ளார்.
நேற்றைய வானிலை நிலவரம்
குமரி மாவட்டத்தில் மீன்வர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.