கோவையில் இருந்து டாப் ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, மீண்டும் 100 கி.மீ.க்கும் மேல் நடந்தே தனது வாழ்விடத்தைத் தேடி வந்தது. இதையடுத்து, விளை நிலங்களுக்கு சேதம் ஏற்படுத்துவதால், சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட்ட நீதிபதிகள், "சின்னத்தம்பியை யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக தலைமை வன பாதுகாப்பு அதிகாரி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பிடிப்பதற்கு முன்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பிடிக்கும் போது சின்னதம்பியை எந்த வகையிலும் துன்புறுத்தவோ காயம் ஏற்படுத்தவோ கூடாது. சின்னத்தம்பி யானையை முகாமுக்கு கொண்டு செல்வதா? அல்லது மீண்டும் காட்டுக்கு அனுப்புவதா என்பதை தலைமை பாதுகாப்பு அதிகாரியே முடிவு செய்யலாம்" என உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க - "இப்படியே விட்டால் சின்னத்தம்பி செத்துருவான்"! - விடாமல் பாசப் போராட்டம் நடத்தும் யானை
மேலும் சின்னதம்பியை நிரந்தரமாக முகாமில் வைப்பதா அல்லது காட்டிற்குள் அனுப்புவதா என்பது குறித்து பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முதல் சின்னத்தம்பி யானையைப் பிடிக்கும் பணி தொடங்கியது. ட்ரோன் கேமரா வைத்து யானையைக் கண்காணிப்பது, பாதை ஏற்படுத்துவது போன்ற பணிகள் நடந்துவந்தன. இன்று அதிகாலை, சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி போடுவதற்கு வனத்துறை முயற்சி செய்தது. ஆனால், சின்னத்தம்பி யானை கரும்புக் காட்டுக்குள் சென்றுவிட்டது. இதனால், நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, கும்கி யானை கலீமின் உதவியுடன் சின்னத்தம்பி வெளியில் வரவழைக்கப்பட்டது.
மருத்துவர் அசோகன் செலுத்திய முதல் ஊசி குறி தவறியது. பின்னர், வன ஆலோசகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் செலுத்திய இரண்டாவது ஊசி, அதன் கால் பகுதியில் செலுத்தப்பட்டது. அதேபோல மூன்றாவது முறை மீண்டும் மருத்துவர் அசோகன் செலுத்திய ஊசி குறி தவறிப்போனது. நான்காவது முறையாக தங்கராஜ் பன்னீர் செல்வம் முயன்றும் பயனில்லை. இப்படியான பல முயற்சிகளுக்குப்பின், சின்னத்தம்பி, மீண்டும் கரும்புக் காட்டுக்குள் சென்றுவிட்டது.
கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னதம்பியை பலாப்பழத்தின் வாசனையைக் கொண்டு வெளியே வர வைத்தனர். பின்னர் ஐந்தாவது முறையாக சின்னதம்பிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப் புதூரில் முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை யானை வனத்துறை பிடித்தது. தற்போது அதனை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பேட்டியளித்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன், "யானைக்கு உருது மொழி கொண்டு பயிற்சிகள் கொடுக்கப்படும். சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணமில்லை" என்றார்.