சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர், முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் உள்ள செங்கற்சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்ட வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் வனத்துறையினரை திணறடிக்கும் சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைய, தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கற்சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் காரணம் எனவே யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து உள்ள செங்கல் சூலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். யானைகள் ஊருக்குள் நுழைவதால் யானை - மனித மோதல்கள் ஏற்படுகின்றது.
மேலும் யானைகள் வழித்தடத்தில் இந்த செங்கற்சூளைகள் இருப்பதால், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க - "இப்படியே விட்டால் சின்னத்தம்பி செத்துருவான்"! - விடாமல் பாசப் போராட்டம் நடத்தும் யானை
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்வதே யானைகள் ஊருக்குள் புகுவதற்கு காரணம் என தெரிவித்தார். எனவே யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.