சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து பழகி ஏன் மீண்டும் வனத்திற்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சின்ன தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக் கோரி விலங்கு நல ஆர்வலர்கள் அருண் பிரசன்னா மற்றும் முரளிதரன் சார்பில் பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.
மேலும் படிக்க - "இப்படியே விட்டால் சின்னத்தம்பி செத்துருவான்"! - விடாமல் பாசப் போராட்டம் நடத்தும் யானை
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கையளிக்க வனத்துறைக்கு கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் நேற்று விசாரனை வந்த போது, நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவாத்சவா, சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முயற்சித்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. தற்போது சின்னத்தம்பி மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் அதனை காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் படி யானையை பிடித்து முகாமில் பாதுகாத்து பராமரிக்க இருப்பதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நாளை வழக்கை மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் பிற்பகல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆஜராகி சின்னதம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக, நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும். எனவே வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைக்க வேண்டும் என கோரினார். நாளை யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார்.
இதையடுத்து, சின்னத் தம்பி யானைக்கு ஏன் இயற்கை உணவுகளை கொடுத்து பழகி மீண்டும் காட்டிற்குள் அனுப்ப கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். தற்போது விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை உண்ணுவதால் அது வனப்பகுதிக்கு செல்லாமல் உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார். பின்னர் சின்னத் தம்பி யானையின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்தனர்.
