சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை தொகுதியில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் உச்சகட்டமாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துக்கு மறுநாள் ஏப்ரல் 18ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இந்த உற்சவம் அன்று அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து விடிய விடிய நடைபெற்று ஏப்ரல் 19ல் காலை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் நடைபெறும். அழகர் எதிர்சேவை மற்றும் ஆற்றில் இறங்குவதை தரிசிக்க தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து வருவார்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க - Election 2019: திமுக - அதிமுக தொகுதிப் பங்கீடு லைவ்
இதே நாளில் தான் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடைமுறையில் இது சாத்தியமா? என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்விக்குறி. திருவிழா தேதியை மாற்ற முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை எழக்கூடும் என்பதால், தேர்தல் ஆணையம் மறு ஆய்வு நடத்தி, தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும். அதே நாளில் தேர்தல் நடத்தினால் மக்கள் வாக்களிப்பதில் கடும் சிக்கல் எற்படும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.
இதனிடையே மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒத்திவைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடக்கும் ஏப்.18ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நடப்பதால் மதுரை தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வைக்க வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க - தேமுதிக தொகுதியில் பாமக பிரச்சாரம் செய்யுமா? - விஜயகாந்தை சந்தித்த பின் ராமதாஸ் பதில்
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் - எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியவில்லை எனில் தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்திவைக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் வாக்காளர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, கடமைக்காக தேர்தலை நடத்த நினைத்தால் நடத்துங்கள் என்று கூறினார். பல லட்சம் பேர் பங்கேற்கும் சித்திரை திருவிழாவுடன் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது என்று குறிப்பிட்ட நீதிபதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், இல்லையென்றால் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.