சிகரெட் பிடிப்பது போன்ற சர்கார் பட விளம்பரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், சன் பிஸ்சர்ஸ் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் எஸ்.சிரில் அலெக்ஸாண்டர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழ்நாடு புகையிலை பொருட்களுக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். இந்தியாவில் கோடிக் கணக்கான பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். புகைப் பழக்கத்தினால், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர்.
இந்த நிலையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து கடந்த 2011 ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர், புகைப்பிடிக்கும் காட்சியை சினிமா, டி.வி. சீரியல் உள்ளிட்டவைகளில் இடம் பெற கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் புதிய படமான சர்கார் படத்தின் விளம்பர புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அதில், அவர் சிகரெட்டை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் வாயில் சிகரெட் வைத்திருப்பது போலவும், அதில் இருந்து புகை மேலே பறப்பது போலவும் படம் உள்ளது.
இது, சிகரெட் முற்றும் இதர புகையிலை பொருட்கள் விளம்பரம் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக உள்ளது.
மேலும், தமிழ்நாடு விளம்பரம் பொருள் கட்டாய தணிக்கை சட்டம் 1987-ன் கீழ் இந்த விளம்பர போட்டோவுக்கு தணிக்கை சான்றிதழ் பெறவில்லை. இந்த சட்டத்தின்படி ஆட்சேபனைக்குரிய பொருள் அல்லது காட்சிகளை கொண்ட விளம்பர போஸ்டர்களை பொதுமக்களுக்கு பார்வையிடம் விதமாக வெளியிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி ஆட்சேபனைக்குரியது ஆகும்.
தமிழகத்தை பொருத்தவரை, நடிகர்களை ரசிகர்கள் கடவுளாக கருதுகின்றனர். அதனால், சினிமா துறையிலும், பொதுவாழ்விலும் நடிகர்கள், ரசிகர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால், நடிகர் விஜய் மோசமான நடவடிக்கையை “ஹீரோயிசம்’ போல காட்டுகிறார். மேலும், சிகரெட் மற்றும் பிற வகை புகையிலை பொருட்கள் விளம்பர தடைச் சட்டத்தின்படி மாநில அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு, இதுபோன்ற சர்ச்சைக்குரிய விளம்பரம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் புகைபிடிப்படதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
எனவே, விஜய் நடிக்கும் சர்கார் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம், நடிகர் ஜோசப் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில கண்காணிப்பு குழுவுக்கும், பொது சுகாதாரத்துறைக்கும் உத்தரவிட வேண்டும்.
புகையிலை பொருட்களை விளம்பரம் செய்வதை தடுக்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். புற்றுநோயாளிகளின் நலனுக்காக பொது நிதியம் உருவாக்கி, நடிகர் ஜோசப் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி இழப்பீடு வசூலிக்க வேண்டும். அந்த தொகையை ராயப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரியின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.’’
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்ஸர்ஸ் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.