Closure of TASMAC Liquor Shops : கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் பரவி வருகின்ற சூழலில், ஊரடங்கில் சில முக்கிய தளர்வுகளை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மதுபான கடைகளுக்கும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இதனை தொடர்ந்து மே 7ம் தேதி சில கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்ற அறிவிப்புடன் தமிழக அரசு மதுபான கடைகளை திறந்தது.
Advertisment
ஆனால் தமிழக அரசின் சமூக இடைவெளிக்கான விதிமுறைகளை ”குடிமக்கள்” பலரும், பல்வேறு இடங்களில் பின்பற்றவில்லை. டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி கூட்டணிக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில அமைப்புகள் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் நேற்று, டாஸ்மாக் கடைகள் லாக்டவுன் முடியும் வரை திறக்கப்பட கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஆன்லைன் மூலம் மது பானங்களை டெலிவரி செய்ய என்ன ஏற்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது தமிழக அரசு. மே 7 மற்றும் மே 8 தேதிகளில் தமிழகத்தில் ரூ. 300 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மோசமான வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil