திமுக தலைவர் கருணாநிதிக்கு தேவைப்பட்டால் மருத்துவ உதவி செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதி, வயது முதிர்வின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வருகிறார். தமிழக அரசின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேரடியாக சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வந்துள்ளனர்" என்றார்.
மேலும் படிக்க: காவேரி மருத்துவமனையில் குவியும் தலைவர்கள்! கருணாநிதி மீண்டு வருவார் என நம்பிக்கை
திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, "இதுவரை மருத்துவ உதவி கேட்கப்படவில்லை. அவர் முன்னாள் முதல்வர். 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார், தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். மருத்துவ உதவி செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது" என்றார்.