மருத்துவர்கள் கூட வியந்து போகும் அளவிற்கு, கருணாநிதியின் உடல்நிலை நன்கு ஒத்துழைத்து வருகிறது. நேற்று (ஜூலை 29) இரவு கருணாநிதியின் உடல் நிலை சிறிது நலிவுற்றபோது, ஸ்டாலின் உட்பட குடும்பத்தார் கலங்கித் தான் போனார்கள். தொண்டர்கள் கூட்டம் ஒரு பக்கம் அணி அணியாய் திரள, மழை தன் பங்கிற்கு வெளுத்து வாங்க அங்கு பதட்டமான சூழ்நிலையே நிலவியது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சேலம் பயண நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, நேற்று இரவே அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் என்றும், நள்ளிரவு அவர் மருத்துவமனைக்கு வருகிறார் என்ற செய்தி வெளியானதும், பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
மேலும் படிக்க - கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES
நேரம் செல்ல செல்ல, தொண்டர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது... 'மீண்டு வா தலைவா' என்று கோஷம் விண்ணை பிளக்க, தொண்டர்கள் முழங்கினர். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஒருபக்கம் மருத்துவமனை வந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
இரவு 8 மணியளவில், காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என எதிர்பார்த்த நிலையில், 9 மணி வரை அறிக்கை ஏதும் வெளியாகததால், மேலும் பரபரப்பு கூடியது. இந்நிலையில், இரவு 10 மணியளவில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலை சீராகிக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் பின்னரே, தொண்டர்கள் மத்தியில் இருந்த கலக்கம் குறைந்தது.
மேலும் படிக்க: கருணாநிதி உடல்நலம் தொடர்பாக கல்லூரிகளுக்கு விடுமுறையா?
இதைத் தொடர்ந்து, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், 'கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது' என்றார். இறுதியாக, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின், 'மருத்துவர்கள் சொன்னது போல், தலைவரின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு இருந்தது. ஆனால், தற்போது கலைஞர் நலமாக உள்ளார். விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டும். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்" என்று அறிக்கை வெளியிட, அதன்பின்னரே கூட்டம் மருத்துவமனையில் இருந்து கலைந்தது.
மேலும் படிக்க: கருணாநிதி உடல்நிலையில் நேற்று இரவு என்ன நடந்தது?
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வந்தனர். முதல்வரும் துணை முதல்வரும் கருணாநிதியை அவர் சிகிச்சை பெறும் வார்டில் சென்று பார்த்தனர். அப்போது மு.க.ஸ்டாலின், கனிமொழி உடன் இருந்தனர்.
இதன்பின் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திமுக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும் துணை முதல்வர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று மதிப்புக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி அவர்களை பார்த்தோம். நலமுடன் இருக்கிறார். மருத்துவக் குழு அங்கேயே இருந்து கவனித்து வருகிறார்கள்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.