Advertisment

'மார்ச் 31 வரை கோயில், மசூதி, சர்ச்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை' - முதல்வர் அறிக்கையின் முழு விவரம்

COVID-19 in Tamil Nadu: நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். ஆகம விதிகளின்படி, திருக்கோயில்களில் அனைத்து கால பூஜைகளும் எப்பொழுதும் போல் நடைபெற வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'மார்ச் 31 வரை கோயில், மசூதி, சர்ச்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை' - முதல்வர் அறிக்கையின் முழு விவரம்

Corona Virus in Tamil Nadu: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் மார்ச் 31-ம் தேதி வரை அனுமதி இல்லை. மசூதிகள், சர்ச், தர்காக்களுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி மார்ச் 31-ம் தேதி வரை மக்கள் கூடாமல் இருக்க அறிவுறுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்புகள்,

வருமுன் காப்போம் என்ற முதுமொழிக்கு ஏற்ப, கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. இந்த நோய்த் தொற்றைத் தடுக்க இனி எடுக்க வேண்டிய தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கீழ்க்காணும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே மார்ச் 9, மார்ச் 13 மற்றும் மார்ச் 16 அன்று இது சம்பந்தமாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, விரிவான அறிவுரைகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனை அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கான படுக்கை வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்பு மருத்துவமனைகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடன், சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் காணொலிக் காட்சி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ அறிவுரைகளும், ஆற்றுப்படுத்துதலையும் தொடர்ந்து வழங்க வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் நோய்த் தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கையுறைகள், காலணிகள் ஆகியவை போதிய அளவில் வழங்கப்பட வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக 'சர்ச்'களில் பொது வழிபாடுகள் ரத்து: சென்னை மயிலை பேராயம் அறிவிப்பு

அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில், மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினியை நாளொன்றுக்கு இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

வாரச் சந்தைகள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும்.

மக்கள் மிக அதிகமாகக் கூடக்கூடிய நீதிமன்றங்கள், விமான நிலையம், ரயில்வே நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தீவிர நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாள் ஒன்றுக்கு மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்நிறுவனங்களில் நோய் தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்நிறுவனங்களில் உள்ள உணவகங்களை மிகவும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மேலும், இவ்வலுவலகங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் ஏற்கெனவே, வணிக வளாகங்கள் (mall) மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் அதிகம் செல்லக்கூடிய ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி (centrelized air contitioned) கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், இவை நாளை முதல் மூடப்படும். எனினும், நகைக் கடை போன்றவற்றில் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்படி பொருட்களைப் பெற்றுச் செல்ல மட்டும் ஒரு தனி வழியைப் பயன்படுத்தலாம்.

அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.

சென்னையில் வடபழனி அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில், மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோயில், ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில், பழனி அருள்மிகு முருகன் திருக்கோயில் ஆகிய மிகப் பெரிய திருக்கோயில்களில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். ஆகம விதிகளின்படி, திருக்கோயில்களில் அனைத்து கால பூஜைகளும் எப்பொழுதும் போல் நடைபெற வேண்டும்.

மேலும், திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு முருகன் திருக்கோயில், காஞ்சி அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் உள்பட அதிக மக்கள் வரக்கூடிய மிகப் பெரிய திருக்கோயில்களில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும், ஆகம விதிகளின்படி, திருக்கோயில்களில் அனைத்து கால பூஜைகளும் எப்பொழுதும் போல் நடைபெற வேண்டும்.

அதேபோன்று, அதிக மக்கள் வரக்கூடிய பெரிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் / தர்காக்களில் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசி தகுந்த அறிவுரை வழங்கி, அதனைக் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ள வேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து நோய் பரவ வாய்ப்புள்ளதால், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல், பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில் போக்குவரத்தையும் கணிசமாகக் குறைக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

விமான நிலையங்களில், உள்நாட்டு முனையத்தில் சோதனைகளைத் தீவிரப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையேயான ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகள் அறிவுறுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனாவால் 3-வது நபர் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

ரயில் மற்றம் சாலை மார்க்கமாக வரும் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய பயணிகளை அழைத்துச் செல்வதற்கென விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சிறப்பு வாகன ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அத்தகைய வாகனங்களை கிருமி நாசினி மூலம் அடிக்கடி தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டுநர்கள் முழு பாதுகாப்புடன் வாகனங்களை இயக்குவதற்கான வசதிகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பான்கள் மற்றும் பிற உபகரணங்கள் தேவையான அளவு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வாங்கிப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசு எடுத்து வரும் இத்தகைய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பினை நல்கி, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அரசுடன் மக்களும் இணைந்து இந்த கரோனா வைரஸ் நோயினை வென்று, நோயற்ற தமிழ்நாட்டினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment