தமிழக அரசின், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்ததன்படி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து தைவான் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் மாவட்ட தொழில்துறையினருடன் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு சுமார் 4,500 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்: தமிழக பள்ளிகளில் “வானவில் மன்றம்” திட்டம்; திருச்சியில் முதல்வர் துவக்கி வைப்பு
நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கே.என்,நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜா, தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், சின்னப்பா, மாவட்ட ஊராட்சி தலைவர் சி.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி துவங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையுடன் மருத்துவ கல்லூரி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பரிந்துரையின் பேரில் அப்போதைய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு கடந்த 3.2.2009 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் குன்னம் தாலுகா, ஒதியத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவகல்லூரி அமைக்க ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை சார்பில் 30 ஏக்கர் 28 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அப்போதைய சுகாதார செயலாளர், மத்திய, மாநில அமைச்சர்கள் மருத்துவ கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தமிழக அரசு சார்பில் மண் பரிசோதனை மற்றும் அப்பகுதியில் உள்ள நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி பெரம்பலூரில் நடந்த அரசு விழாவில் அப்போதைய தமிழக துணை முதல்வர் இருந்த ஸ்டாலின் பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவிற்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பதவியிடமும் உருவாக்கப்பட்டு மருத்துவகல்லூரி டீனாக பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டது. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவக்கல்லூரி டீனுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 23.7.10-ல் நிர்வாக அனுமதியும், 30.12.10-ல் தொழில் நுட்ப அனுமதியும் வழங்கி, ரூ.82 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர் மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் தொடங்க தமிழக அரசால் ஒப்பந்தம் விடப்பட்டு, 2010-ல் மார்ச் மாத இறுதியில் முதல் கட்டமாக அஸ்திவாரம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது.
இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து 10 ஆண்டுகளாக பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு ஆணை வெளியிடப்பட்டும், நிதி ஒதுக்கீடு செய்தும் 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு மருத்துவக்கல்லூரி துவங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் பெரம்பலூருக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கடந்த தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரியை மீண்டும் தி.மு.க ஆட்சியில் அமைப்பதற்கான கட்டும் பணியை தமிழக அரசு விரைவில் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்றைய முதல்வரின் வருகை பெரம்பலூர் மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என புலம்புவதை கேட்க முடிந்தது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.