Coimbatore Missing College Student Pragati Found Dead : பொள்ளாச்சியில் தொடர்ந்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள். பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கல்லூரி செல்லும் இளம் பெண்ணின் பிரேதம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இறந்து போன பெண்ணின் பெயர் பிரகதி என்றும் அவருடைய வயது 20 என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்த்துறையினர் 5 தனிப்படைகள் வைத்து, கொலையாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வந்த வண்ணமே உள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவி யார் ?
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகள் பிரகதி. கோவை அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். திருமணம் நிச்சயக்கப்பட்டு, அதற்காக முகூர்த்தப்பட்டு எடுக்க, விடுப்பு கேட்டு வீட்டுக்குச் சென்றவர். 5ம் தேதி விடுதியில் இருந்து கிளம்பிய பெண், வீடு வந்த சேராத நிலையில் அப்பெண்ணின் பெற்றோர்கள், நேற்று கோவை, காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள வாய்கால்மேட்டில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணையில் கோவையில் காணமால் போன பெண் என்பது உறுதியானது.
கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
பிப்ரவரி இறுதியில் 4 பேர் கொண்ட கும்பல்கள் 7 வருடங்களாக சுற்றுவட்டாரப் பகுதி பெண்களை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வீடியோ புகைப்படம் எடுத்து மிரட்டியது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வுகள், கைதுகள், விசாரணைகள் என்று சிறிது வாரங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் கோவை துடியலூர் பகுதியில் 6 வயது பள்ளி செல்லும் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விபரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பொள்ளாச்சி விவகாரம், மற்றும் துடியலூர் விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளப்படுத்திய காரணத்திற்காக கோவை எஸ்.பி., பொள்ளாச்சி டி.எஸ்.பி. என அனைவரையும் கூண்டோடு இடம் மாற்றம் செய்து, எஸ்.பி. பாண்டியராஜனை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் ஒரு இளம் பெண்ணின் கொலை, அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை அளிக்கின்றது.
மேலும் படிக்க : பொள்ளாச்சி வழக்கை விசாரித்த அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்… காத்திருப்போர் பட்டியலில் எஸ்.பி. பாண்டியராஜன்