conditional bail for dmk mla moorthy, madras high court, chennai high court, court news, tamil news, news in tamil, latest tamil news, திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி, நிபந்தனை முன் ஜாமீன், தமிழக செய்திகள்
மதுரையில் பாஜக நிர்வாகியை காலணியால் தாக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மூர்த்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
மதுரையைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், மருத்துவருமான சங்கரபாண்டியன் என்பவர் திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இதில் ஆத்திரமடைந்த மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் மூர்த்தி, கடந்த 22 ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன், பா.ஜ நிர்வாகியையும், அவரது மனைவியையும், காலணியால் அடிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியானது.
இதுதொடர்பான வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல்
வழக்கறிஞர் ஏ. நடராஜன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியனை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் உள்ளதாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகித்ததோடு தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக சங்கர பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், மதுரை ஊமச்சிகுளம் காவல்நிலையத்த்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி சதீஷ்குமார், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil