Corona Latest TN Reports: சென்னையில் நேற்று ஒரேநாளில் 509 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 412 ஆண்கள், 257 பெண்கள் அடக்கம். நேற்றைய நாளில் மட்டும் 13,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் 74 வயது முதியவரும், சென்னையில் 59 வயது நபரும், திருவள்ளூர் 55 வயது நபரும் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று, மட்டும் 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,195 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 364 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6337 பேர், 60 வயதை கடந்தவர்கள் 503 பேர் உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ. 5-க்கு மாஸ்க்; தூத்துக்குடியில் அறிமுகமானது தானியங்கி முகக்கவச இயந்திரம்!
மாவட்ட வாரியாக சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சென்னையில் மட்டும் நேற்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3839 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேர், கிருஷ்ணகிரியில் 10 பேர், திருநெல்வேலி 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13367 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 243037 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 12962 தனிநபர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 232368 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக அதிகபட்சமான பரிசோதனை நடத்திய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதுவும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
இளம் வயதினர் அதிகம் தமிழகத்தில் 0 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகள் எண்ணிக்கை 187 ஆகவும், பெண் குழந்தைகள் எண்ணிக்கை 177 ஆகவும் உள்ளது. 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களே கொரோனா தொற்றால் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 4255 பேரும், பெண்கள் 2080 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேல் உள்ள 503 பேருக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஆண்கள் 310 பேரும், 193 பேர் பெண்களும் அடக்கம்.
தமிழக பொருளாதார மேம்பாடு ஆலோசனைக்கு குழு: இடம் பெற்ற நிபுணர்கள் யார், யார்?
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு
மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,
அரியலூர் – 4
செங்கல்பட்டு – 43
சென்னை – 509
கடலூர் – 1
காஞ்சிபுரம் – 8
கரூர் – 1
கிருஷ்ணகிரி – 10
மதுரை – 4
பெரம்பலூர் – 9
புதுக்கோட்டை – 1
ராமநாதபுரம் – 1
ராணிப்பேட்டை – 6
தேனி – 3
திருப்பத்தூர் – 1
திருவள்ளூர் – 47
திருநெல்வேலி – 10
வேலூர் – 3
விழுப்புரம் – 6
விருதுநகர் – 2
என மொத்தம் தமிழகத்தில் 669 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”