சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் இந்த நோய் பரவியுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். உலக நாடுகளில் இன்றைய நிலவரப்படி 1,10,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சீனாவுக்கு வெளியே, இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 202-ல் இருந்து 686 ஆக உயர்ந்துள்ளாதாக உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது.
104 நாடுகளில் 28,673 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் எஞ்சினியர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றிரவு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு தமிழகத்தில் இருக்கும் மருத்துவ வசதிகள் தான் காரணம் என்பதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
#Corona update: a good news for Our state, the Pt undergoing treatment at #RGGH is tested negative for Corona,this speedy recovery is possible only because of the meticulous treatment & expertise of #TNHealth to handle exigencies. As of now, #TN is CORONA FREE. #CVB @MoHFW_INDIA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 10, 2020
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான விடுதி ஒன்றினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (10/03/2020) அன்று திறந்து வைத்தார். அவருடன் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி உள்பட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அந்நிகழ்வில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் “இதுவரையில் 1,31,793 பேருக்கு கொரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். இவர்களில் 1,192 நபர்களின் நேரடி மருத்துவக் கண்காணிப்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அப்பா, மகன் இருவரும் நலமாக உள்ளனர். அந்த 15 வயது சிறுவன் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே ஒரு நபரைத் தவிர வேறு யாருக்கும் கொரோனாவைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். குறிப்பாக மாஸ்க் அணியத் தேவை இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையின்படி இந்நோயை தடுக்க சுகாதாரத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றும் தமிழகத்தில் இந்நோய் அதிகம் பரவவில்லை என்றும் கூறியுள்ளார்.
சென்னை கிங்ஸ் பரிசோதனை கூடத்தில் மட்டும் நோய்தொற்றுக்கான பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், தேனியில் ஒரு பரிசோதனை கூடம் தயார்ப்படுத்தப்பட்டது. கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும் நிலையில் 4 இடங்களை அதற்காக தேர்வு செய்துள்ளது குறித்தும் அவர் அறிவித்தார்.
மேலும் படிக்க : அது என்ன கட்சி தலைவரா? ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சர்; வைரல் வீடியோ
ஐ.டி. நிறுவனங்களின் நிலை
ஐ.டி. நிறூவனங்களிலும் கொரோனா வைரஸின் பரவல் குறித்து விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. நம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் 1600-க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்களில் 250 நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைப் பார்த்துக் கொள்ள அனுமதித்துள்ளது. அவர்களுக்கான பணிகள் மற்றும் அதன் விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்கும் வகையில் சில விதிமுறைகளை தங்களின் ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.