Coronavirus Janata Curfew Karur youths gave food and veggies to the locals : 22/03/2020 அன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இந்த ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
சாலைகளில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்கள், மாற்று திறனாளிகளிக்கு காலை மற்றும் மதியம் என இரண்டு நேரங்களிலும் உணவினை வழங்கியுள்ளனர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள். மூன்று தன்னார்வ அமைப்பினை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக திரண்டு 800 நபர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு உணவுகளை செய்து கொடுத்துள்ளனர். இட்லி, லெமன் சாதம், தக்காளி சாதம், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு டூவிலர்களில் வைத்து கரூர் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு போய் கொடுத்துள்ளனர். இளைய தலைமுறை, இணைந்த கைகள், ஒன் ஸ்டெப் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தை சார்ந்த இந்த இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை உறுதி
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது வ.வேப்பங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர் நரேந்திரன் கந்தசாமி என்பவர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மோடியின் ஊரடங்கு உத்தரவினால் நிச்சயமாக கிராம மக்கள் சிரமப்படுவார்கள் என்று உணர்ந்த அவர் தன்னுடைய சமுதாய காய்கறித் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 கிலோ வரை இலவசமாக வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
மேலும் படிக்க : கொரோனா எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல, அதற்கும் அப்பால்
இது போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மனித நேயத்தை காக்க பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை பலருக்கும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.