நாகை மாவட்டம் பகுதியில் ஆதியன் பழங்குடியின குழந்தைகளுக்காகவே நடத்தப்பட்டு வருகிறது வானவில் என்ற பள்ளிக் கூடம். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டதால் வானவில் பள்ளியும் மூடப்பட்டுள்ளது. மாற்று கல்விக் கொள்கை மற்றும் சிந்தனைகள் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அவர்களின் தலைமுறையை மாற்றும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்ட பள்ளி. பள்ளி நடத்துவதைப் போன்றவே, கொரோனா போன்ற ஆபத்தான காலங்களில் மாற்று சிந்தனைகள் மூலம் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது வானவில் பள்ளி.
குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு விஷயங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வானவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். கைகளை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
பெருந்திரளாக மக்கள் வாழும் சமூகத்தில் அனைவரிடமும், டிவி மற்றும் ரேடியோக்கள் இருக்கின்றதா என்பது சந்தேகம் தான். ”டிஜிட்டல்” விழிப்புணர்வு கடைக்கோடி மக்கள் வரை சென்று சேருமா என்று தெரியவில்லை. மாணவர்களுக்கு விளையாட்டு மூலமாக கைகளை கழுவதற்கான தேவைகள் குறித்தும், பெரும்கொள்ளை நோய்கள் குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு தேவையான உணவுகளும் தயார் செய்யப்பட்டு, அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க : இந்தியாவில் கல்வி அடிப்படை உரிமையா? கேள்வி கேட்கும் வானவில் குழந்தைகள்!
கொரோனா பெரிய பெரிய மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை மட்டும் புரட்டிப் போடவில்லை. மதிய உணவிற்காக மட்டும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் நிலை என்ன? அவர்களின் ஆரோக்கியம், அவர்களுக்கு தேவையான போஷாக்கான உணவும் கேள்விக்கு ஆக்கப்பட்டுள்ள நிலையில் வானவில் பள்ளியின் இந்த செயல்பாடு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை தருகிறது. மேலும் தங்களின் பாதுகாப்பினையும் பொருட்படுத்தாமல், பள்ளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் உதவும் ஆசிரியர்களின் சேவை மனப்பான்மை வியப்படைய வைக்கிறது.