herbal mysorepak, covai herbal mysorepak, corona virus, covid 19 chennai, chennai news, covai news, tamil news, மூலிகை மைசூர் பா, கோவை, கொரோனா வைரஸ்
Coimbatore: கோவை தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர், நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற இனிப்புகடையை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக மூலிகை மைசூர்பா மூலம் கொரோனோவை எளிதாக விரட்டலாம் என துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து வந்தார்.
Advertisment
இது சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இதை அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அந்த கடையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் சித்த மருத்துவ துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் ஆகியோர் அந்த கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதில் முறையான அனுமதி இல்லாமல் 18 வகையான மூலிகைப் பொருட்களை பயன்படுத்தி, ஸ்ரீராம் என்பவர் கொரோனா கொல்லி மைசூர்பா என்று தயாரித்து பச்சை நிறத்தில் 50 கிராம் பாக்கெட் (2 எண்ணம்) ரூ.50-க்கும், ஒரு கிலோ ரூ-800 க்கும் விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் பேரிடர் காலத்தில், அவர் தமது சொந்த விளம்பரத்திற்காக, மூலிகை மைசூர்பா என்ற பெயரில் கொரோனோவை குணப்படுத்தலாம் என போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, கடையில் இருந்த இனிப்பு மற்றும் மூலிகைப் பொருட்களையும்,120 கிலோ மைசூர்பாவையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறும்போது, "தவறான தகவல்களை பரப்பியதற்காக கடை உரிமையாளர் ஸ்ரீ ராம் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மூலிகை மைசூர்பா விற்பனை செய்ய அவர் எவ்வித அனுமதியும் பெறவில்லை.
எனவே ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சித்த மருத்துவ துறை அதிகாரிகள் மைசூர்பாவை பறிமுதல் செய்து, ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளனர். ஸ்ரீ ராம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil