அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ், தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார்.
Advertisment
அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டு ஓபிஎஸ் தலைமையில் ஓரணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியுமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தீவிர ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், கடந்த 3- ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகினார்.
அதேசமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், நல்ல முடிவு விரைவில் எடுப்பேன், ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். இதனால் அவர் திமுகவில் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
Advertisment
Advertisements
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ்; ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று நானும் எனது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தோம்.
1971இல் என்னுடைய 14 வயதில் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அரசியலில் நுழைந்தேன். தற்போது இவ்வளவு காலம் கழித்து மீண்டும் தாய் கழகத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறேன். இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் சுனாமி வந்து அழிவை ஏற்படுத்தியது போல இபிஎஸ் தலைமையில் நாடும், மக்களை அழிவை சந்தித்தனர். அவருடைய செயல்பாட்டின் மூலம் சீரழிந்த மாநிலத்தை ஸ்டாலின் இன்று சீர்படுத்தி மக்களின் மனநிலையை புரிந்து ஆட்சி செய்து வருகிறார்.
அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் இன்றைய தினம் பாவ மன்னிப்பு வாங்கிக் கொள்கிறேன். இலவச மின்சாரம் மூலம் விவசாயிகள் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றி வைத்துள்ளார். சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செயல்பட வந்துள்ளேன் என்று கோவை செல்வராஜ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“