Covid-19 scare in Chennai Stickers outside houses quarantined covid 19
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Advertisment
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களை மற்றவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் வீடுகளில் ஸ்டிக்கரும், கையில் முத்திரையும் வைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில், வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்கள் இருக்கும் 3 ஆயிரம் வீடுகளில், 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதனை சரியான புரிதலோடு மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா தாக்கத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால், அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
இதுபோன்ற ஸ்டிக்கர்கள் அண்டை வீட்டாரை புறக்கணிக்க வழிவகுக்கும் என்றாலும், 'இது அவசர காலமாகும், எனவே குடியிருப்பாளர்கள் அதை "சரியான மனப்பான்மையில்" எடுக்க வேண்டும்' என்று ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும், அரசின் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் குறித்து சிலர் எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை, "பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்கிவைப்பது போன்றதாகிவிடும்" என்று சிலர் கூற, மற்றொரு தரப்பினர் தொற்றுநோய்களின் போது "தேவையான நடவடிக்கை இது" என்றும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
மாநகராட்சி தரவுகளின்படி, தேனாம்பேட்டையில் 799 பேரும், அடையாரில் 532 பேரும், கோடம்பாக்கத்தில் 358 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொரோனா பரவியதில் இருந்து இதுவரை தேனி மாவட்டத்திற்கு 104 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். இதில் பலருக்கும் சாதாரண சளி, காய்ச்சல் பிரச்சினை உள்ளதால் அவர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்களிலும் சளி பிரச்சினை உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.