என்.எல்.சி விவகாரத்தில் மக்கள் உணர்வை இனியாவது தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பு போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை ஏவி நிலங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. என்.எல்.சி.,யால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மக்கள் எதிர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே இந்த வெற்றிக்கு காரணமாகும்.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் அதிகரிக்கும் இன்புளூயன்சா வைரஸ் பரவல்; மார்ச்சில் இதுவரை 330 பேர் பாதிப்பு

என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறல்கள், கடலூர்
கடலூர் மாவட்டத்தின் நலனுக்காக உண்மையான அக்கறையுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்துத் தரப்பினரும் பா.ம.க.,வின் பின் திரண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அதே நேரம், தமிழ்நாடு போராட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காவல்துறை தலைவர் (ஐ.ஜி), இரு காவல்துறை துணைத்தலைவர்கள் (டி.ஐ.ஜி), 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர்கள் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தார்கள். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில மணி நேரத்தை தவிர்த்து கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தான் முகாமிட்டிருந்தார்.
முழு அடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அரசு எந்திரம் முழுமையையும் அவர் முடுக்கி விட்டிருந்தார். இதனால் போராட்டத்தை முறியடித்து விட்டோம் என அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தெரிவித்தாலும், அமைச்சரின் தொகுதியான குறிஞ்சிப்பாடியில் தான் முழு அடைப்பு முழுமையாக இருந்திருக்கிறது. அமைச்சரின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம்,
கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும் அவற்றில் பயணம் செய்வதற்கு பயணிகள் பெரியளவு ஆர்வம் காட்டினாலும் அச்சத்துடனே பயணத்தை தொடர்ந்தனர். இருந்தாலும் அரசு காவல்துறை உத்தரவாதத்தின் அடிப்படையில் அரசு பேருந்துகளில் பெரும்பாலும் அரசு அலுவலர்களே பயணம் செய்தனர். பேருந்துகளுக்கு முன்னும் பின்னும் முதல்வருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு போல காவல்துறை வாகனங்கள் அணிவகுத்தது. இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகத்தான் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில் அரசியல் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அப்பாவி பொதுமக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுதந்திரமாக எங்கும் பயணிக்க முடியவில்லை, நினைத்ததை சென்று வாங்க முடியவில்லை. ஒரு வித அச்சத்தில் தான் பொதுமக்கள் சாலையை கடக்க முடிந்தது. தனியார் வாகனங்கள் ஓடவில்லை, தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை, பெரும்பாலான கடைகள் இயங்கவில்லை என்ற போது பொதுமக்கள் மட்டுமே பாதிப்பை உணர்ந்தனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil